-
மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் ஆண்டு வருமானவரி உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது - மத்திய நிதிநிலை அறிக்கை குறித்து டாக்டர் பாரிவேந்தர் கருத்து - (அறிக்கை விவரம்)
இன்று (01.02.2019) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால நிதிநிலை அறிக்கை, கடந்த நான்கரை ஆண்டுகால பாஜக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக GST வரி விதிப்பு முறையின் மூலம் நாட்டின் வருவாய் உயர்ந்துள்ளதோடு, வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் பெருமளவில் உயர்ந்துள்ளதாகவும். உலக அளவில் பொருளாதார வலிமையுள்ள முக்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளதாகவும் நிதியமைச்சர் பொறுப்பை வகிக்கும் திரு.பியூஸ் கோயல் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2011-12 ஆம் ஆண்டுகளில் 6 சதவீதமாக இருந்த பணப்பற்றாக்குறை தற்போது 3 சதவீதமாக குறைந்துள்ளது பாராட்டுக்குரியதாகும். இதேபோல், நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் 2.5 சதவீதமாக இருக்கும் என மத்திய நிதியமைச்சர் கூறியுள்ளார். அதனை எட்டும் வகையில், தொழில் வளர்ச்சியில் இந்தியா முன்னேற அனைத்து உதவிகளையும் – வசதிகளையும் மத்திய அரசு செய்து தரவேண்டும்.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான புதிய ஓய்வூதியத்திட்டம், பணிக்கொடையை ரூபாய் 10 லட்சத்தில் இருந்து 30 லட்சமாக உயர்த்தியிருப்பது, பணிபுரியும் பெண்களுக்கான பேறுகால விடுமுறையை 26 வாரங்களாக உயர்த்தியிருப்பது, சிறு-குறு விவசாயிகளுக்கான கடன் வட்டியில் தள்ளுபடி போன்றவை வரவேற்கத்தக்க அறிவிப்புகளாகும். அதிலும் குறிப்பாக, மக்கள் அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்ட, வருமான வரி விலக்கின் உச்சவரம்பை, 2.50 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தியிருப்பது பாராட்டுக்குரியதாகும். மொத்தத்தில் மத்திய பாஜக அரசு, வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க தயாராகிவிட்டதன் அறிவிப்பாகவே இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையை எடுத்துக்கொள்ளலாம்.