• கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்த - தமிழக முதல்வருக்கு டாக்டர் பாரிவேந்தர் பாராட்டு

    இன்று (08.01.2018) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றிய முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைப்பதற்கான அறிவிப்பினை  வெளியிட்டுள்ளார். இது காலத்தே செய்த மிகச்சிறந்த செயலாகும்.

    தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களில், பரப்பளவில் மிகவும் பெரிய மாவட்டங்களுள் ஒன்றாக விழுப்புரம் மாவட்டம் இருந்து வருகின்றது.  அதிலேயும் கல்வராயன் மலை – சின்ன சேலம் ஆகிய மலைப்பாங்கான பகுதிகளைச் சேர்ந்த மக்கள், விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு வரவேண்டுமானால் சுமார் 120 கிலோ மீட்டர் பயணம் செய்யவேண்டிய நிலையில் இருந்தனர்.  இதற்காக இம்மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டுமென கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் கட்சிகளாலும் – வியாபாரிகளாலும் விவசாயிகளாலும் விடுக்கப்பட்ட கோரிக்கை இன்று நிறைவேறியிருக்கிறது.

    விழுப்புரம் மாவட்டத்தைப் பொருத்தவரை 11 சட்டமன்றத் தொகுதிகள் – 22 ஊராட்சி ஒன்றியங்கள் என பரந்து விரிந்த மாவட்டமாக இருந்துள்ளது. இதனால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் – மாவட்ட வருவாய் அலுவலகம் – மாவட்ட ஊராட்சி அலுவலகம் ஆகியவற்றிற்கு மக்கள் சென்றுவருவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில், கள்ளக்குறிச்சி - சின்னசேலம் - சங்கராபுரம் ஆகிய வட்டங்களைப் பிரித்து இப்புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டிருப்பதன் மூலம், பொதுமக்களுக்கு  தேவையற்ற காலவிரயம் தவிர்க்கப்பட்டுள்ளது. அவ்வகையில் தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உருவாகியுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களையும், இந்த அறிவிப்பினை வெளியிட்ட தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பாரட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.