• வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டம் இயற்ற வேண்டும் - தமிழக அரசுக்கு டாக்டர் பாரிவேந்தர் வலியுறுத்தல்

    தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் இன்று 2019-ம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் உரையாற்றியுள்ளார். இதில் தமிழகத்தின் மிகத்தீவிர பிரச்சைனைகள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் எந்த அறிவிப்பினையும் வெளியிடவில்லை. வழக்கமான – சம்பிரதாயமான உரையாகவே அந்த உரை உள்ளது. 

    குறிப்பாக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.  ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிவிடவேண்டும் என அம்மாவட்ட மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். காரணம் ஆலை வளாகத்திலும், அதனைச்சுற்றியுள்ள கிராமங்களிலும் நிலத்தடி நீர் - காற்று  மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் வந்துகொண்டிருந்தது. 

     கடந்த 1997-ம் ஆண்டில், அதாவது - ஆலை தொடங்கிய ஒரே வருடத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பிற்காக, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சுமார் 4 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தியுள்ளது.  அதனைத் தொடர்ந்து நாக்பூரைச் சேர்ந்த “தேசிய சுற்றுச்சூழலுக்கான பொறியியல் ஆராய்ச்சி மையம்” இந்த ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு உள்ளிட்ட  பராமரிப்புப் பணிகளை ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவில் குளோரைட், புளோரைட், குரோமியம், தாமிரம் உள்ளிட்ட தாதுப்பொருட்கள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் இருப்பதாக அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூட உடனடியாக உத்தரவிட்டது. எனினும், ஆலை நிர்வாகம் மேல்முறையீடு செய்ததையடுத்து, ரூபாய் 100 கோடி அபராதம் விதித்து, இவ்வாலை மீண்டும் செயல்பட உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது.

    ஆனாலும், பொதுமக்களின் எதிர்ப்புகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இறுதியில், துப்பாக்கிச்சூடு நடைபெற்று, 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தினையடுத்து, ஆலை இயங்குவதற்கு தமிழக அரசு உடனடியாக தடை விதித்தது.  எனினும், ஆலை நிர்வாகத்தின் முறையீட்டின் பேரில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மூவர் குழுவினை அமைத்து, ஆலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் ஆய்வு செய்ய உத்தரவிட்டது. கடந்த டிசம்பர் 15-ம் தேதி அவர்கள் அளித்த அறிக்கையில் சில நிபந்தணைகளுடன் ஆலை மீண்டும் இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

    ஆலையை மீண்டும் இயக்குவதற்காக தேசிய பசுமைத்தீர்ப்பாயம் அளித்த உத்தரவு, உண்மை நிலைமைக்கு முற்றிலும் முரண்பாடாக உள்ளதென அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். 

    இந்நிலையில் பசுமைத்தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு எதிராக இன்று (02.01.2018) உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. ஆலைக்கு எதிரான சட்டப் போராட்டம் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் கூட, தமிழக அரசு சட்டமன்றத்தில் இதற்கான தீர்மானத்தைக் கொண்டுவரவேண்டும் என வலியுறுத்துகின்றோம். நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான சட்ட முன்வடிவையோ அல்லது தீர்மானத்தினையோ தமிழக அரசு நிறைவேற்றி, ஆலை மீண்டும் செயல்படாதிருக்க அனைத்து வழிகளையும் மேற்கொள்ளவேண்டும்.

    மேலும், ஆளுநர் உரையில், அத்திக்கடவு – அவினாசி திட்டத்தினை செயல்படுத்த ரூபாய் 1,652 கோடி நிதியினை ஒதுக்கியுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து இத்திட்டம் விரைவாக செயல்படுத்தப்படும் எனவும் கூறியிருப்பதனை வரவேற்கின்றோம். மேலும், பவானி ஆற்றிலிருந்து வெளியேறும் உபரி நீரை ஏரி-குளம் ஆகியவற்றில் தேக்கி,குடிநீர் விவசாய பாசனத்திற்காக பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளதனையும் வரவேற்கின்றோம். 

    காவிரியின் குறுக்கே மேகேதாட் எனும் இடத்தில் அணை கட்டும் கர்நாடகாவின் அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்தவேண்டும். 

    விளை நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்கும் திட்டத்தினை கைவிட்டு,சாலை ஓரங்களில் கேபிள் பதித்து, அதன் மூலம் இத்திட்டத்தினை செயல்படுத்தவேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம். 

    பொங்கல் பரிசாக அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருப்பது,  மக்களின் எதிர்ப்புத் தீயினை அனைக்க ஓரளவிற்கே பயன்படும். 

    கஜா புயல் பாதித்த தஞ்சை – புதுக்கோட்டை – நாகை – திருவாரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய பெருங்குடி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தினை இழந்து நிர்கதியாய் தவிக்கின்றனர். அவர்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக்கொள்வதற்கான நிரந்தரத் திட்டம் எதுவும் ஆளுநர் உரையில் குறிப்பிடப்படாதது ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது. 

    மொத்தத்தில் ஆளுநர் உரை அரசின் கொள்கை அறிவிப்புகள் எதனையும் கூறாத வெறும் வார்த்தைகளின் வடிவமாகவே உள்ளதெனக் கருதுகின்றோம்.