• கஜா புயலால் பாதித்த 4 மாவட்ட விவசாயிகளுக்கு IJK சார்பில் வரும் 7-ம் தேதி 25,000 தென்னங்கன்றுகள் வழங்கப்படும் - டாக்டர் பாரிவேந்தர் அறிவிப்பு

  கடந்த மாதம் 16-ம் தேதி இரவு முதல் வீசிய கஜா புயல், தஞ்சை – புதுக்கோட்டை – நாகை – திருவாரூர் ஆகிய மாவட்டங்களை அடியோடு புரட்டிப்போட்டது. பல லட்சம் தென்னை, வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. தேக்கு – பலா – புளிய மரங்களும் ஆயிரக்கணக்கில் முறிந்து விழுந்தன. பல லட்சம் மக்கள் வீடு -வாசல் இழந்து நிர்கதியாய் நிற்கும் அவல நிலைக்கு உள்ளாகினர். 
  500-க்கும் மேற்பட்ட மின் மாற்றிகளும், 30 ஆயிரத்திற்கும் அதிகமான மின் கம்பங்களும் அடியோடு சாய்ந்ததால்4 மாவட்டங்களிலும் ஒட்டுமொத்தமான மின் இணைப்பே துண்டிக்கப்பட்டு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கே மக்கள் அல்லாடும் பரிதாப நிலை ஏற்பட்டது.

  இந்த இயற்கை பேரழிவிலிருந்து அம்மக்களை மீட்டெடுக்க, அரசும் – அரசியல் கட்சிகளும், பல்வேறு சமூக சேவை அமைப்புகளும், தனியார் நிறுவனங்களும்  செயல்பட்டன. அதேபோல், இந்திய ஜனநாயக கட்சியும் - SRM கல்விக்குழுமமும்  இந்த நிவாரணப்பணிகளில் தன்னை முழு அளவில் ஈடுபடுத்திக்கொண்டது. அதன் முதற்படியாக நவம்பர் 23–ம் தேதி, தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து, SRM  கல்விக்குழுமம் சார்பில் ரூபாய் 1 கோடி நிவாரணநிதி அளிக்கப்பட்டது. மேலும், இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில், ரூபாய் 60 லட்சம் மதிப்பிலான போர்வை –பாய் – பக்கெட் – குவளை – கொசுவர்த்தி – மெழுகுவர்த்தி – தண்ணீர் பாட்டில் – நாப்கின் உள்ளிட்ட நிவாரணப்பொருட்களை, நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டை – தஞ்சை மாவட்ட மக்களுக்கு, நானே நேரில் சென்று வழங்கினேன். மேலும், எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமணை மூலம், இந்த நான்கு மாவட்டங்களிலும் தொடர்ந்து 15 நாட்கள் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.

  நவம்பர் 24-ம் தேதி, புதுக்கோட்டை மாவட்டத்தில் நிவாரணப் பொருட்களை வழங்கி பேசியபோது,தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை ஆகிய நான்கு மாவட்டங்களிலிருந்து SRM பல்கலைக்கழகத்தில் படிக்கும்,650 மானவர்களின் 48 கோடி ரூபாய் அளவிற்கான கல்விக்கட்டணமும், விடுதிக்கட்டணமும்முற்றிலும் ரத்து  செய்யப்படும் என அறிவித்தேன்.

  தொடர்ந்து 25-ம் தேதி  பட்டுக்கோட்டை – பேராவூரணி ஆகிய பகுதிகளை பார்வையிடச் சென்றேன்.அப்பகுதி தென்னை விவசாயிகள் என்னை சந்தித்து, புயலால் விழுந்து கிடக்கும் தென்னை மரங்களை அப்புறப்படுத்தி – புதிய தென்னங்கன்றுகள் நட உதவி செய்யவேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையினை ஏற்று, முதற்கட்டமாக 25 ஆயிரம் தென்னங்கன்றுகள் வழங்கப்படும் என அறிவித்தேன்.அதன்படி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியிலிருந்து 25 ஆயிரம் தென்னங்கன்றுகள் வரவழைக்கப்பட்டுள்ளது. அவைகள் வரும் 7 – ம் தேதி, முதற்கட்டமாக புதுக்கோட்டை  - தஞ்சை – பேராவூரணி – பட்டுக்கோட்டை – ஒரத்தநாடு ஆகிய பகுதிகளைச் சார்ந்த தென்னை விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

  மேலும், புயலால் சாய்ந்து கிடக்கும் தென்னை மரங்களை வெட்டி அப்புறப்படுத்த அறுவை இயந்திரமும்,மட்டை – ஓலை ஆகியவற்றை தூளாக்குவதற்கான அரவை இயந்திரமும் வழங்கப்பட உள்ளது. இதனை SRMவேளாண் கல்லூரி பேராசிரியர்களும், உதவிப் பேராசிரியர்களும் செய்முறை விளக்கமளித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க உள்ளனர்.  எனவே இந்த வாய்ப்பினை அப்பகுதி விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.