• கஜா புயலால் சீர்குலைந்துள்ள தமிழகத்தை இயற்கை பேரிடர் மாநிலமாக அறிவிக்க வேண்டும் - மத்திய அரசுக்கு டாக்டர் டாக்டர் பாரிவேந்தர் கோரிக்கை

    கடந்த 16-ம் தேதி வெள்ளிக்கிழமை, தமிழகத்தை மையம் கொண்டு தாக்கிய கஜா புயல் கிழக்கு கடற்கரையோர மாவட்டங்களை மட்டுமல்லாது, புதுக்கோட்டை – திண்டுக்கல் போன்ற மத்திய மாவட்டங்களிலும் பெரும் சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசுக்கு இதுவரை கிடைத்துள்ள தகவலின்படி சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் இப்புயலில் பலியாகியுள்ளனர். மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்நிலையில், இப்புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன். படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் அனைவரும் விரைவில் பூரண நலம்பெற வேண்டுகிறேன்.

    நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள இப்புயலின் கொடூர தாக்கத்திலிருந்து, மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப வெகுநாட்கள் ஆகும் எனத் தெரிகின்றது. நாகை – திருவாரூர் – புதுக்கோட்டை – திண்டுக்கல் – திருச்சி – சிவகங்கை – ராமநாதபுரம் – கரூர் - கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.

    சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்கள் வேரோடு சாய்ந்திருக்கின்றன. 40 ஆயிரம் மின் கம்பங்களும், 347 மின்மாற்றிகளும் உடைந்து கீழே சாய்ந்துள்ளன. இதேபோல் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  வீடுகளும் பலத்த சேதத்திற்குள்ளாகியிருக்கிறது. புயலுக்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தாழ்வான பகுதிகளில் வாழ்ந்து வந்த 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் 493 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் பெருமளவில ஏற்படவிருந்த உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன என்பது ஒரு ஆறுதல்.

     மேலும், ஆயிரக்கணக்கான மாடுகளும் – ஆடுகளும் உயிரிழந்துள்ளதாகவும், வாழை – கரும்பு – நெல் – தென்னை ஆகிய பயிர்களும், சாகுபடி நிலங்களும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகின்றது. இதனிடையே மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, அடுத்த இரண்டு நாட்களுக்கு வடக்கு தமிழகம் மற்றும் கிழக்கு கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பெருமழை பெய்யும் என வானிலை அறிக்கை கூறுகின்றது. நிவாரணப் பணிகள் முழுமையடையாத நிலையில், மீண்டும் மழையோ – புயலோ வந்தால் அது நிலமையை மேலும் சிக்கலாக்கிவிடும். பத்து மாவட்டங்களுக்கும் அதிகமாக பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும்.

    இவ்வாறு ஒட்டு மொத்தமாக ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பினை மாநில அரசு மட்டுமே சரிசெய்துவிட முடியாது. மத்திய அரசின் உதவி பெருமளவில் தேவைப்படும். எனவே, மத்திய அரசு முழு அளவில் தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். துணை ராணுவப் படைகள், இயற்கை பேரிடர் மீட்பு படைகள், மருத்துவ துறையினர், சாலை சீரமைப்பு பணியாளர்கள் போன்ற அத்தியாவசிய துறையினரை நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்த மத்திய அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். தமிழக அரசின் போர்க்கால நிவாரணப்பணிகளுக்கு உதவும் வகையில், இயற்கைப் பேரிடர் பாதித்த மாநிலமாக தமிழகத்தை அறிவிக்க வேண்டும் என மத்திய அரசினை கேட்டுக்கொள்கின்றேன்.