• “ஐ.ஏ.எஸ். அகாடமி நிறுவனர் திரு.சங்கர் அகால மரணம்” - டாக்டர் பாரிவேந்தர் இரங்கல்

    தமிழகம் மற்றும் இந்தியாவில் புகழ்பெற்று விளங்கும் ‘சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி’யின் நிறுவனர் திரு.சங்கர் அவர்கள் இன்று காலை அகால மரணமடைந்தார் என்கிற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியுற்றேன். பல நூறு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ..பி.எஸ். அதிகாரிகளை உருவாக்கிய் நிறுவனத்தின் தலைவர் – மிகச்சிறந்த பயிற்சியாளர்  திரு.சங்கர் அவர்களின் மரணம் தமிழக மாணவர்களுக்கு, குறிப்பாக தேசிய அளவிலான போட்டித் தேர்வில் பங்கெடுக்க விரும்பும் மாணவர்களுக்கு பெரும் இழப்பாகும்.

    நடுத்தர குடும்பத்தில் பிறந்து தானும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வரவேண்டும் என்கிற கனவுகளோடு தன் மாணவப் பருவத்தினைத் தொடங்கியுள்ளார். அக்கனவு நிறைவேறாமல் போனதையடுத்து, தன்னைப்போலவே பல நூறு மாணவர்கள் ஏமாற்றமடைவதை அறிந்துள்ளார். தான் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் ஐ.ஏ.எஸ் பயிற்சி நிறுவனத்தை தொடங்கி, அர்ப்பணிப்பு உணர்வோடு அதனை நடத்தி வந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் நுற்றுக்கணக்கான மாணவர்கள் அவரின் நிறுவனத்திலிருந்து ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று வந்தனர். மேலும், கிராமப்புற ஏழை – எளிய மாணவர்களுக்கு கட்டணம் இல்லாமலும் கூட பயிற்சி அளித்துள்ளார்.

    இந்நிலையில், இன்று நேரிட்ட அவரின் அகால மரணம் தேசிய அளிவில் தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்ட ஒரு பின்னடைவாகவே கருதுகின்றோம். மரணமடைந்த திரு. சங்கர் அவர்களின் குடும்பத்தினருக்கும் – அவரின் மீது பற்று கொண்ட ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் – அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.