• மத்திய அரசைப் பின்பற்றி பெட்ரோல் – டீசல் விலையை மாநில அரசும் குறைக்கவேண்டும் - தமிழக அரசுக்கு டாக்டர் பாரிவேந்தர் வலியுறுத்தல் –

    கடந்த  சில மாதங்களாக பெட்ரோல் - டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மிகப்பெரும் பொருளாதார சுமையை மக்கள் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணையின் விலை உயர்வாலும், உலகப் பொருளாதார மாற்றங்களால் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததாலும் இந்த விலையேற்றம் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. எனினும் இக்கருத்தை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.பெட்ரோல் – டீசல் ஆகியவற்றின் உற்பத்தி விலையோடு, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் வரியும் சேர்வதே விலை உயர்வுக்கு காரணமாகும்.

    இந்நிலையில் மத்திய அரசு கலால் வரியில் ரூபாய் 1.50-ம், எரிபொருள் மீதான விலையில் ரூபாய் 1-ம் என மொத்தமாக ரூ.2.50 அளவிற்கு குறைத்துள்ளது. இதனையொட்டி அனைத்து மாநிலங்களும் பெட்ரோல் – டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியினையும் குறைக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் திரு. அருண்ஜெட்லி அவர்கள் கூறியுள்ளார்.அதனை ஏற்று குஜராத் – மகாராஷ்டிரம் - உத்தரப்பிரதேசம் – மத்தியப் பிரதேசம் – இமாச்சலப்பிரதேசம் – அரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் மத்திய அரசின் விலை குறைப்பான ரூபாய் 2.50 உடன், மாநில அரசுகளும் தங்கள் பங்காக ரூபாய் 2.50-ம் சேர்த்து 5 ரூபாய் விலை குறைப்பு செய்துள்ளது. 

    இதனைப் பின்பற்றி தமிழக அரசும் மதிப்புக்கூட்டு வரியில் ரூ.2.50-ஐ குறைத்து மொத்தமாக பெட்ரோல் – டீசல் விலையில் 5 ரூபாய் குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்துகின்றேன்.