• முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் டாக்டர் பாரிவேந்தர் – ஆசிரியர் தின வாழ்த்து

       இந்தியாவின்  இரண்டாவது குடியரசுத்தலைவராகவும் -  மிகச்சிறந்த அரசியல் மற்றும் தத்துவத்துறை பேராசிரியராகவும் விளங்கியவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள். அவர் மேற்கத்திய மற்றும் இந்திய தத்துவத்துறையில் மாபெரும் ஆய்வாளராக விளங்கினார். பகவத் கீதை, உபநிடதங்கள்,பிரம்மசூத்திரம் போன்ற அரிய நூல்களுக்கு விளக்க உரைகள் எழுதியுள்ளார். அவரின் உரைகள் வேதாந்த – தத்துவ ஆய்வு மாணவர்களுக்கு மிகப்பெரும் வழிகாட்டி நூலாகவும் அமைந்துள்ளது.இத்துணைச் சிறப்புகள் வாய்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ம் தேதியை ஆசிரியர் தினமாகக் கொண்டாடி வருகின்றோம்.

     டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய பிறந்த நாளை எவ்வாறு கொண்டாட வேண்டும் என அவரே கூறியுள்ளார். அதில் “என்னுடைய பிறந்த நாளுக்கு விழா எடுப்பதற்குப் பதிலாக ‘செப்டம்பர்5’ என்ற தினத்தை ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால் நான் பெருமிதம் கொள்வேன்”எனக்கூறியுள்ளார். அவரின் அவ்விருப்பத்தினை நிறைவேற்றும் வகையிலும், ஆசிரியர் சமுதாயத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலும் அவரின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடி வருகின்றோம்.

       ஒரு நாட்டின் பெரும் செல்வமாக விளங்குவது, அந்நாட்டின் இளைஞர் சக்திதான். அதிலேயும் குறிப்பாக சிறந்த மாணவர்களை உருவாக்குவதென்பது மிகப்பெரும் கடமையாகும். அக்கடமையினை ஒரு சேவையாக நினைத்து பணியாற்றிவரும் ஆசிரியர் பெருமக்களுக்கு என் இதயமார்ந்தவாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.