-
கட்சிப்பணி – ஆட்சிப்பணி இரண்டிலும் உழைப்பால் உயர்ந்தவர் திரு.மு.க.ஸ்டாலின் - டாக்டர் பாரிவேந்தர் வாழ்த்து -
தமிழகத்தின் மிகப்பெரும் அரசியல் ஆளுமையாக விளங்கிய மாபெரும் தலைவர்கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவையடுத்து, தமிழக அரசியல் களமும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பதவியும் வெற்றிடமானது. இதனையடுத்து திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுவில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளார்.
1980-ம் ஆண்டுகளில் திமுக-வின் இளைஞரணி அமைப்பில் தன் அரசியல் பணியைத் துவக்கிய திரு.ஸ்டாலின் அவர்கள், கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் – பொருளாளர் – செயல்தலைவர் என்று பல படிநிலைகளில் உயர்ந்தார். இதேபோல் ஆட்சிப்பணியிலேயும் சட்டமன்ற உறுப்பினர் – சென்னை மாநகர மேயர் – அமைச்சர் – துணை முதல்வர் என்று பல உயர் பொறுப்புக்களை வகித்துள்ளார்.கட்சிப்பணி – ஆட்சிப்பணி இரண்டிலும் தன் திறமையாலும், உழைப்பாலும் உயர்நிலைக்கு வந்துள்ள திரு.ஸ்டாலின் அவர்கள்,
திமுக-வின் தலைவராக உயர்வு பெற்றது எதிர்பாரா சம்பவமல்ல. கலைஞர் கருணாநிதி அவர்களின் மகனாக இருந்தாலும்கூட, திமுக-வின் மற்ற நிர்வாகிகளைப் போலவே கலைஞரின் மீது மிகுந்த பற்றும், பக்தியும் கொண்டவராகவும், கட்சியின் நிர்வாக அமைப்புகளுக்கு ஏற்ப செயல்புரிபவராகவும் தன்னை வார்ப்பித்துக்கொண்டார்.
ஒரு அரசியல் கட்சி நிர்வாக ரீதியிலும் – உள் கட்டமைப்பிலும் செயல்பாட்டிலும் எவ்வாறு இயங்க வேண்டுமென்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் இலக்கணம் வகுக்கின்ற கட்சியாக உள்ளது. அதன் பெருமைக்கு மேலும் வலு சேர்க்கின்ற வகையில் திரு.ஸ்டாலின் அவர்களுடைய செயல்பாடுகள் அமையும் என்கிற நம்பிக்கையில் என் வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.
இதேபோல், திமுக-வின் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு.துரைமுருகன் அவர்கள், நீண்ட நாள் சட்டமன்ற உறுப்பினர் – அமைச்சர் என்கிற அரசு நிர்வாகப் பொறுப்புக்களில் சிறந்து செயலாற்றியவர். மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் நெருங்கிய சகாவாகவும் விளங்கியவர். அவருக்கும் என் அன்பான வாழ்த்துக்களையும் – பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.