• இந்தியத் திருநாட்டின் மதிப்புமிக்க தலைவராக விளங்கியவர் அடல்பிகாரி வாஜ்பாய் அவர்கள் - டாக்டர் பாரிவேந்தர் இரங்கல் -

    மிகச் சிறந்த நாடாளுமன்றவாதியும், ஜனநாயகத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டவருமான முன்னாள் பிரதமர் உயர்திரு அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் மரணம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 1924-ம்ஆண்டு டிசம்பர் மாதம் 25-ம் தேதி பிறந்த திரு.வாஜ்பாய் அவர்கள், ‘வெள்ளையனே வெளியேறு, எனும் முழக்கத்துடன் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டார். அதனால் தன் இளம் வயதிலேயே 23 நாட்கள் சிறைவாசத்திற்குப்பின் விடுதலை செய்யப்பட்டார்.

     சிறந்த பேச்சளாராக விளங்கிய வாஜ்பாய் அவர்கள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலும், பாரதிய ஜன சங்கத்திலும் தீவிரமாக ஈடுபட்டு, அதன் தலைவர்கள் சியாமா பிரசாத் முகர்ஜி மற்றும் தீனதயாள் உபாத்யாயா ஆகியோரின் நம்பிக்கைக்குரிய இளம் தலைவராக உருவானார்.இந்தியாவில் 1975-ம் ஆண்டு காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட நெருக்கடி நிலையை துணிச்சலுடன் எதிர்த்துப் போராடினார். பின்னர், ஜனதா கட்சியுடன் இணைந்து மத்திய அரசில் அமைச்சராக பொறுப்பேற்றார்.

    1980-ம் ஆண்டு, பாரதிய ஜனதா கட்சியை துவக்கிய வாஜ்பாய் அவர்கள் 1996-ம் ஆண்டில் இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்றார். கார்க்கில் யுத்தம், அணு ஆயுதசோதனை, தங்க நாற்கரச்சாலை போன்ற திட்டங்கள் மூலம் மக்களிடையே புகழ்பெற்றார்.

    இந்தியத் திருநாட்டின் மதிப்புமிக்க தலைவராக விளங்கிய திரு.அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களின் மறைவு, நம் தேசத்தின் பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயகத்திற்கு பேரிழப்பாகும்.அவரை இழந்து வாடும் பாஜக வினருக்கும், அவரின் ஆதரவாளர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்.