• தமிழினத்தின் உரிமைக்குரலாக ஒலித்த பிறவிப் போராளி டாக்டர் கலைஞர் - IJK நிறுவனர் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் இரங்கல் -

  டந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழக அரசியலின்  மைய விசையாகவும், ஒரு நூற்றாண்டு கால வாழ்க்கைப் பயணத்தில் பல்வேறு அனுபவங்களின் பதிவாகவும் விளங்கியவர் திமுக தலைவர் கலைஞர் அவர்கள். அவரின் வாழ்க்கை என்பது தனி நபரின் வரலாறாக மட்டுமன்றி, இந்திய அரசியலின் வரலாறாகவும் குறிப்பாக தமிழக அரசியலின் வரலாறாகவுமே இருந்துள்ளது.

  அவர் எழுதிய ‘நெஞ்சுக்கு நீதி எனும் வாழ்க்கை வரலாற்று தொடர் மூலம் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை அறிந்து கொள்வதைவிட, தமிழக அரசியல் மாற்றங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பாகவே உள்ளது. திராவிட இயக்க தலைவர்கள் எண்ணற்றோர் இன உரிமைக்காக பாடுபட்டபோதிலும், பெரியார் – அண்ணா என்கிற இருபெரும்  ஆளுமைகளின் தொடர் சங்கிலியாக விளங்குபவர் கலைஞர் மட்டும்தான்.

  தி.மு.க-வின் தலைவர் – எழுத்தாளர் – பேச்சாளர் – கவிஞர் - ஆட்சியாளர் என்கிற பண்முக ஆளுமையாக விளங்கி, அவைகளில் வெற்றியாளராகவும் திகழ்ந்த வரலாற்று நாயகர் கலைஞர் என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை.

  அவர் ஐந்துமுறை தமிழகத்தின் முதல்வராக இருந்த காலங்களில்தான் தமிழகத்தின் உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டன. கிராமப்புறங்களுக்கான சாலை வசதிகள், போக்குவரத்து அரசுடமை, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, தமிழ்வழி கல்விக்கு முன்னுரிமை, மருத்துவத் துறையில் புதிய அணுகுமுறை, பிற்படுத்தப்பட்ட – தாழ்த்தப்பட்ட – சிறுபான்மையோருக்கான கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டு முறைகளை உறுதி செய்தல், அனைத்து சாதியினரும் அர்ச்சகராதல் போன்ற புரட்சிகரமான திட்டங்களை செயல்படுத்தினார். மத்தியில் கூட்டாட்சி – மாநிலத்தில் சுயாட்சி என்று மத்திய - மாநில அரசுகளின் உறவிற்கு புதிய இலக்கணம் வகுத்தார்.

  பள்ளிப்படிப்பை மாத்திரமே பயின்ற கலைஞர் அவர்கள், இலக்கியத்துறையில் ஆற்றிய சாதனைகள் வியப்பிற்குரியதாகும். தொல்காப்பியப் பூங்கா, சங்கத்தமிழ், குறளோவியம் என செவ்விலக்கியங்களை எளிய நடையில் கொண்டுவந்தது அவரின் மொழியாளுமைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

  எவ்வளவு இறுக்கமான சூழ்நிலையாக இருந்தாலும் இயல்பான நகைச்சுவை மூலம் அதனை இலகுவாக மாற்றும் ஆற்றல் பெற்றவர். அவரின் அரசியலுக்கு நேர் எதிர் நிலையில் இருப்பவர்களைக்கூட, தனிப்பட்ட முறையில் மிகுந்த பண்போடு கையாளும் நயத்தக்க நாகரீகம் படைத்தவர்.

  தமிழகத்தின் தலைவராக விளங்கினாலும், மத்திய அரசியலின் நிலைப்போக்கை மடைமாற்றம் செய்யும் தேசியத் தலைவராகவும் அவர் வியாபித்திருக்கிறார். இத்தனை சாதனைகளையும் தனி ஒருவர் பெற்று, தோன்றிய துறைகளில் எல்லாம் வெற்றியாளராக வலம் வந்தார் என்பதை எதிர்காலம் நம்ப மறுக்கும். அதுதான் கலைஞர் என்கிற மாபெரும் தலைவரின் வெற்றி. அவரின் மறைவிற்கு ஆறுதல் சொல்ல வேறெந்த வரிகளோ – வாத்தைகளோ இல்லை. மௌனம் ஒன்றுதான் அதற்கான ஒரே மொழி. அந்த மாபெரும் தலைவரின் மறைவிற்கு என் மௌன அஞ்சலியை செலுத்துகின்றேன்.