• சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை அமைப்பதன் மூலம் போக்குவரத்து மற்றும் பொருளாதார நிலை வளர்சியடையும் - ஐஜேகே நிறுவனர் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அறிக்கை -

  தமிழக அரசியல் கட்சிகளாலும், சில அமைப்புகளாலும் தற்போது பெரிதும் விமர்சிக்கப்படுவது சென்னை - சேலம் இடையிலான எட்டுவழிச்சாலை திட்டமாகும். முதலில் இத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பார்க்கலாம். தற்போது சென்னையிலிருந்து சேலத்திற்கு செல்ல இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று சென்னையிலிருந்து வேலூர் மார்க்கமாக செல்வதும், மற்றொன்று சென்னையிலிருந்து விழுப்புரம் -உளுந்தூர்பேட்டை மார்க்கமாக செல்வதும் என இரண்டு வழிகள் உள்ளன. வேலூர் சாலை என்பது சேலத்திற்கு மட்டுமன்றி கிருஷ்ணகிரி – ஓசூர் – பெங்களூர் ஆகிய முக்கிய நகரங்களுக்கும் செல்லும் வழியாக உள்ளது. அதேபோல் விழுப்புரம் மார்க்கம் என்பது திருச்சி உள்ளிட்ட அனைத்து தென் மாவட்டங்களுக்குமான வழியாக உள்ளது.

  எனவே போக்குவரத்து நெரிசலால் பல மணி நேரம் பயணத்தடை ஏற்படுவதை தினசரி சந்தித்து வருகின்றோம். எதிர்வரும் காலங்களில் குறிப்பாக இருபது ஆண்டுகளுக்குள் தற்போதைய அளவைவிட இரண்டு மடங்கு அளவிற்கு தனியார் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என  புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

  இதன் அடிப்படையில் சென்னையிலிருந்து சேலத்திற்கு நேர்வழிச்சாலை அமைக்கவேண்டுமென பல ஆண்டுகளாக கூறப்பட்டு வந்த நிலையில், மத்திய அரசின் முழு நிதிப்பங்களிப்போடு இத்திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. சென்னையிலிருந்து சேலத்திற்கு 274 கிலோமீட்டர் தூரமுள்ள பசுமை வழிச்சாலை ரூபாய் 10 ஆயிரம் கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ளது. இவ்வளவு நீண்ட சாலை அமைப்புத்திட்டம் இந்தியாவிலேயே உத்திரபிரதேசம் – தமிழகம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

  தற்போது, சுமார் 5004 கிலோ மீட்டர் அளவிற்கு தேசிய நெடுஞ்சாலைகளும், சுமார் 11 ஆயிரத்து 752கிலோமீட்டர் அளவிற்கு மாநில நெடுஞ்சாலைகளும் பயன்பாட்டில் உள்ளது. இது போக ஆறு புறவழிச்சாலைகளை புதியதாக அமைக்க ரூபாய் 43 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி அவர்கள் அறிவித்துள்ளதையும் இங்கே நாம் குறிப்பிட விரும்புகின்றோம்.

    

  புதியதாக அமைக்கப்பட உள்ள இப்பசுமை வழிச்சாலையின் 274 கிலோமீட்டரில் 23 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே வனப்பகுதிகளில் செல்கின்றது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிறுவடஞ்சூர்,திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நம்பேடு – பிஞ்சூர் - சுரகுளத்தூர், அல்லேலிமங்களம் –முன்னூர்மங்கலம் – ஆணைவாடி - ராவந்தவாடி, தர்மபுரி மாவட்டத்திலுள்ள பூவாம்பட்டி -  தீர்த்தமலை மற்றும் சேலம் மாவட்டத்திலுள்ள மஞ்சவாடி கனவாய் ஆகிய வனப்பகுதிகளில் இந்த சாலை அமைக்கப்பட உள்ளது.

  இந்த சாலை அமைய, ஐந்து மாவட்டங்களில் 2,343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும்.அதில் சுமார் 100 ஹெக்டேர் நிலம் மட்டுமே வனப்பகுதியிலிருந்து எடுக்கப்படும் எனத் தெரிகிறது. 274கிலோமீட்டர் நீளமுள்ள இச்சாலையில், 23 கிலோமீட்டர் மட்டுமே வனப்பகுதிக்குள் செல்கின்றது.

  இச்சாலை அமைக்கப்படுவதினால் காப்புக்காடுகள், விவசாய நிலங்கள் , குடியிருப்பு பகுதிகள்,கடைகள், கல்வி நிறுவனங்கள், விளைநிலங்களில் உள்ள மரங்கள் பாதிக்கப்படும் அல்லது அப்புறப்படுத்தப்படும் எனக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுக்க முடியாது. இவ்வாறு பாதிக்கப்படும் நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீட்டினை கால தாமதமின்றி வழங்குவதன் மூலமும்,இத்திட்டத்தினால் மாநிலம் அடையவிருக்கும் பொருளாதார மற்றும் போக்குவரத்து வளர்ச்சியினை எடுத்துக்கூறியும், அவர்களின் முழு ஒத்துழைப்புடன் இத்திட்டத்தினை நிறைவேற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

  மேலும், இப்பசுமை வழிச்சாலையில் அமைக்கப்பட உள்ள சுங்கச்சாவடிகள் மூலம் வசூலிக்கும் பணத்தில், 50 சதவிகிதத்தை பாதிக்கப்பட்ட ஊராட்சிகளுக்கு மானியமாக வழங்கவேண்டும். நிலம் மற்றும் வீடுகளை இழக்கும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படவேண்டும். இவற்றையெல்லாம் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் அரசு மேற்கொண்டால் மட்டுமே தற்போது எழுந்துள்ள எதிர்ப்பினை ஓரளவிற்கு கட்டுப்படுத்த முடியும்.

  ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் – தொழிற்சாலைகளின் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கும் சாலைப் போக்குவரத்து மிக மிக இன்றியமையாததாகும். வளர்ச்சியடைந்த நாடுகள் சாலைப்போக்குவரத்திற்கு தரும் முன்னுரிமையிலிருந்தே இதனை தெரிந்து கொள்ளலாம். ‘உலகோடு ஒட்ட ஒழுகல்’ என்பதற்கிணங்க, முன்னேறிய நாடுகளின் வளர்ச்சி விகிதத்திலேயே நாமும் பயணிக்க வேண்டியிருப்பதால் இதுபோன்ற விரைவு பசுமை வழிச்சாலைகள் அவசியமானதாகும்.

  அதேநேரத்தில், பாதிக்கப்படும் மக்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயங்களை புரிந்து கொண்டு,அவர்களுக்கான இழப்பீட்டினை உரிய முறையில் வழங்குவதோடு, எவ்வித முறைகேட்டிற்கும் இடங்கொடாமல் - நேர்மையான முறையில் இத்திட்டத்தினை விரைந்து  நிறைவேற்ற வேண்டுமென தமிழக அரசினை கேட்டுக்கொள்கின்றேன்.