• குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதால் பிற்படுத்தப்பட்ட - கிராமப்புற மாணவர்கள் பயனடைவார்கள் - ஐஜேகே நிறுவனர் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் வரவேற்பு -

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் குரூப் 1 தேர்விற்கான வயது உச்சவரம்பு, இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 35 வயதும், இட ஒதுக்கீடு அல்லாத பொது பிரிவினருக்கு 30 வயதும் உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.  

    குஜராத் – பீகார் – உத்தரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பொது பிரிவினருக்கான வயது உச்சவரம்பு 40-ஆகவும், இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கான வயது உச்சவரம்பு 45-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை முன்மாதிரியாகக் கொண்டு தமிழகத்திலும் வயது உச்சவரம்பை உயர்த்த வேண்டுமென மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது.

    வருவாய் கோட்டாட்சியர், காவல் துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், கூட்டுறவு சங்க துணை பதிவாளர், மாவட்ட பத்திரப் பதிவாளர், மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி, கோட்ட தீயணைப்பு அதிகாரி ஆகிய 8 உயர் பதவிகளுக்கு குரூப் 1 தேர்வு மூலமே நேரடியான பணி நியமனம் செய்யப்படுகிறது. இந்த உயர் பதவிகளுக்கு வர விரும்புகின்ற பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவர்கள் போதிய பயிற்சியின்மையாலும் – கால தாமதத்தினாலும் தேர்வில்  பின்தங்கி விடுகின்றனர்.

    மேலும், 2001 –ஆம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை பணி நியமன தடைச்சட்டம் அமலில் இருந்ததால் அந்த 5 ஆண்டுகளில் தேர்வு எழுதமுடியாமல் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வயது உச்சவரம்பு நிவாரணமாக அமையும் என கருத்து தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (01.06.2018) தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், குரூப் 1 தேர்வெழுதும் மாணவர்களுக்கான வயது உச்சவரம்பினை உயர்த்தியிருப்பதாக அறிவித்துள்ளார். அதன்படி இடஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களுக்கு 35-லிருந்து 37-ஆகவும், இதர பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 30-லிருந்து 32-ஆகவும் வயது உச்சவரம்பினை உயர்த்தியுள்ள தமிழக அரசின் அறிவிப்பினை இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் வரவேற்கின்றேன்.