• களவுபோன சோழமாமன்னர் ராஜராஜ சோழன் சிலையை மீட்டு தமிழகம் கொண்டுவரும் சிலைமீட்புக் குழுவினருக்கு - டாக்டர் பாரிவேந்தர் பாராட்டு -

    தமிழர்களின் கலை – பண்பாடு மற்றும் கட்டிடக் கலை ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது தஞ்சை பெரிய கோயில் என்றழைக்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலயம். உலக நாட்டு மக்கள் வியக்கின்ற வகையில், மாபெரும் திருக்கோயிலை எழுப்பிய மாமன்னர் ராஜராஜ சோழன் அவர்களுக்கும் – அவரின் பட்டத்து அரசி லோகமாதேவிக்கும் தஞ்சை பெரிய கோயிலில்   ஐம்பொன்னால் ஆன சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலைகள் இரண்டும் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் களவாடப்பட்டு தமிழக காவல் துறையினரால் தேடப்பட்டு வந்தது.

    இந்நிலையில் தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி திரு. பொன். மாணிக்கவேல் அவர்களின் தலைமையிலான காவல்துறை அதிகாரிகளின் தீவிர தேடுதல் வேட்டையில், களவு போன இரண்டு சிலைகளும் குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள  சாராபாய் பவுண்டேஷன் அருங்காட்சியகத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து, கடந்த 27-ம் தேதி ஐஜி திரு. பொன். மாணிக்கவேல் அவர்களின் தலைமையிலான குழுவினர் அங்கு சென்றனர். மாமன்னர் ராஜராஜன் மற்றும் லோகமாதேவி ஆகியோரின் சிலைகள்தான் அவை என தடய அறிவியல் மூலம் நிரூபித்து அச்சிலைகளை மீட்டுக் கொண்டுவரும் பணியில் வெற்றி பெற்றுள்ளனர்.

    தமிழக காவல்துறைக்கு குறிப்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு மிகப்பெரும் சவாலாக விளங்கிய இவ்விசாரனையை, மிகுந்த அர்ப்பணிப்புடனும் – தொழில் நுட்ப உதவியுடனும் கண்டறிந்து, அதனை மீட்டு தமிழகம் கொண்டுவரும் ஐஜி திரு. பொன். மாணிக்கவேல் அவர்களின் தலைமையிலான காவல்துறை அதிகாரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் – பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.