• ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் தமிழக அரசின் உத்தரவிற்கு டாக்டர் பாரிவேந்தர் வரவேற்பு

    தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையால்தூத்துக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள மூன்று மாவட்ட மக்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் எனக்கூறிபல ஆண்டுகளாகவே போராட்டங்களும் - ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வந்தன. அதிலும் குறிப்பாக கடந்த மூன்று மாதங்களாக அப்பகுதி மக்களின் போராட்டம் பொது மக்களின் பெரும் பங்களிப்புடன் நடைபெற்று வந்தது.

     கடந்த 22-ம் தேதி போராட்டத்தின் நூறாவது நாள் நிறைவையொட்டி நடைபெற்ற கலவரத்தில், 13 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலியான துயர சம்பவம் நிலைமையின் தீவிரத்தை உலகிற்கு எடுத்துக்காட்டியது. மக்களுக்கு பயன் விளைவிக்காத குறிப்பாக மக்களின் உயிரோடும்அவர்களின் உடல் நலனோடும் விளையாடும் எந்த திட்டமும் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க முடியாது என்பதற்கு இவ்வாலையே உதாரணம்.

    அவ்வகையில் இந்த ஆலையை மூட உத்தரவிட்டும்அதே வேகத்தில் ஆலைக்கு சீல் வைத்தும் துரித நடவடிக்கையை மேற்கொண்ட தமிழக அரசிற்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த ஆலையை மூடும் உத்தரவு நீதிமன்றத்தின் பார்வைக்கு சென்றாலும்அது சட்டப்பாதுகாப்புடன் மீண்டும் செயல்படக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கவேண்டும். தற்போதுஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் உத்தரவு அரசியல் சட்டத்தின் 48A பிரிவின்கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ளதை வரவேற்கின்றோம். வனம், சுற்றுச்சூழல், வன உயிர்களை பாதுகாக்கும் இச்சட்டப்பிரிவின் கீழ் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதால், அவ்வளவு எளிதாக இதனை மீண்டும் இயக்க முடியாது என சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

    அதனை உறுதிப்படும் வகையில் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் உறுதியுடன் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.