தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தொழிற்ச்சாலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் குமரெட்டியாபுரம், வீரபாண்டிபுரம், திருவைகுண்டம், சில்வர்புரம் உள்ளிட்ட இருபதிற்கும் மேற்பட்ட கிராம மக்கள், கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டம் இன்றுடன் (22.05.2018) நூறாவது நாளை எட்டுவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என ஏற்கனவே அறிவித்திருந்தனர். அதன்படி ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாக இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை நோக்கி சென்ற நிலையில், அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் காவல் துறையினர் மீது கற்களை வீசியும், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை தாக்கியும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை எதிர்த்தும் தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
நிலைமை கட்டுப்பாட்டை மீறி சென்றதையடுத்து போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் அவர்கள் கலைந்து செல்ல போலீசார் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் குறித்த விரிவான தகவல் எதுவும் இதுவரை வரவில்லை. மக்கள் போர்க்குணத்துடன் தாக்கும் அளவிற்கு மாநில அரசு மெத்தனமாய் இருந்தது கண்டிக்கத்தக்கது. போராட்டக் குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தி, அவர்களின் அச்சத்தினை போக்கும் வகையில் மாநில அரசு செயல்பட்டிருக்க வேண்டும். தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரவும், மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவும், மாநில அரசு துரிதமாக செயல்படுவதுடன், இச்சம்பவம் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரனை கமிஷன் அமைக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.
Powered by iPOT Technologies