-
‘நீட்’ தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்கு செல்லும் மாணவர்களின் போக்குவரத்து செலவினை தமிழக அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் - IJK நிறுவனர் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் வலியுறுத்தல் -
‘நீட்’ தேர்விற்கு எதிரான மனநிலை தமிழகத்தில் மெல்ல மெல்ல மறைந்து வந்த நிலையில்,மாணவர்களுக்கான தேர்வு மையங்களை ஒதுக்கிய விவகாரம் மீண்டும் அதனை கிளறிவிட்டிருக்கிறது. நீட் தேர்வு எழுத திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சில மாணவர்களுக்கு கேரளா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்களில் இடம் ஒதுக்கியிருப்பதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழக மாணவர்களுக்கு தமிழகத்தில உள்ள தேர்வு மையங்களிலேயே இடம் ஒதுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமனறம் கடந்த மாதம் 27-ம் தேதி அளித்த தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் நேற்று (03..05.2018) தடை விதித்திருப்பது மேலும் அதிர்ச்சியளிக்கிறது. 18 வயதே நிரம்பிய இளம் மாணவர்கள் வேறு மாநிலங்களுக்கு தேர்வெழுத சென்றால் ஏற்படும் இடையூறுகளை – இன்னல்களை அரசும் – நீதிமன்றமும் கவனத்தில் எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. தமிழக அரசும் வழக்கம்போல் அடுத்த ஆண்டில் சரிசெய்து கொள்ளலாம் எனக் கூறுவது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதற்கு ஒப்பாகும்.
நாளை ஒரு நாள் மட்டுமே இடையில் உள்ள அவசர நிலையில், தமிழக அரசு உடனடியாக சில அத்தியாவசிய ஏற்பாடுகளை செய்தாக வேண்டும். கேரளா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு தேர்வெழுத செல்லும் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்குமான போக்குவரத்து, தங்கும் வசதி, உணவு ஆகியவற்றிற்கான செலவினை தமிழக அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். இம்மாணவர்களுக்கு உதவி செய்ய சில ஆசிரியர்களையும் அவர்களுடன் அனுப்பி வைக்க வேண்டும். எவ்வகையிலும் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்பதை உணர்ந்து தமிழக அரசு விரைவாக இந்நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.