• உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இரண்டாவது வாய்ப்பினை பயன்படுத்தி மே 3-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் - மத்திய அரசுக்கு டாக்டர் பாரிவேந்தர் வலியுறுத்தல் -

    காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் 6 வாரங்களுக்குள் அதாவது மார்ச் மாதம்    29-ம் தேதிக்குள் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பினை நிறைவேற்ற ‘செயல்திட்டம் (Scheme) ஒன்றை வகுக்கவேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

    இந்த செயல்திட்டம் என்கிற வார்த்தைக்கு சட்ட ரீதியாகவும் – நிர்வாக ரீதியாகவும் விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு அணுகியது. இவ்வழக்கினை ஏற்றுக்கொண்ட நீதியரசர் தீபக் மிஸ்ரா அவர்களின் தலைமையிலான அமர்வு, மத்திய அரசுக்கு சரமாரியாக கேள்விக்கணைகளை விடுத்துள்ளது. குறிப்பாக கடைசி நாளான மார்ச் 29-ம் தேதி, ஸ்கீம் என்கிற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு நீதிமன்றத்தை அணுகியுள்ளது ஏன்..? என  உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்வி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

    இதனையடுத்து, மே மாதம் 3-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட நதிநீர் பங்கீட்டு நடவடிக்கைகளின் விவர அறிக்கையினை தாக்கல் செய்யவேண்டுமென மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இந்த இரண்டாவது வாய்ப்பினை ஏற்று, வரும் மே மாதம் 3-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த செயல்திட்டத்தினை மத்திய அரசு அறிவிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.