-
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நாளை தூத்துக்குடியில் நடைபெறும் கடையடைப்பிற்கு IJK ஆதரவு - டாக்டர் பாரிவேந்தர் அறிவிப்பு -
கடந்த 23 வருடங்களாக தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையில் செப்புக் கம்பி, கந்தக அமிலம் மற்றும் பாஸ்பரிக் அமிலம் ஆகியன உற்பத்தி செய்யப்படுகின்றது. இவ்வாலையிலிருந்து வெளியேறும் நச்சுப்புகையாலும், மாசுபட்ட கழிவு நீராலும், நிலத்தடி நீர் – காற்றுமண்டலம் ஆகியவை பாதிக்கப்பட்டு தூத்துக்குடியைச் சுற்றியுள்ள பெரும்பகுதி மக்களுக்கு சுகாதாரக் கேட்டினை ஏற்படுத்தி வருகின்றது.
இவ்வாலையிலிருந்து வெளியேறும் நச்சுவாயுக் கசிவினால் கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பு மக்களும் உடலாலும் - மனதாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்டதற்கு அதிகமான கந்தக-டை-ஆக்ஸைடு எனும் நச்சு வாயுவால் பல கிலோமீட்டர் சுற்றளவில் வாழும் மக்களுக்கு மூச்சுத்திணறல் – கண் எரிச்சல் – தொண்டை வலி போன்ற உபாதைகள் ஏற்பட்டு நோயின் பிடியில் வீழ்ந்தனர்.
இவைகளையெல்லாம் காரணம் காட்டி, கடந்த 2013-ஆம் ஆண்டு மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளால் இந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. எனினும், மேல்முறையீட்ளடின் மூலம் தடை உத்தரவை உடைத்துக்கொண்டு மீண்டும் இவ்வாலை செயல்படத் தொடங்கியது.
அதுபோதாதென்று இரண்டாவது தொழில் முகமை (Phase II) அமைக்கின்ற பணியிலும் இவ்வாலை ஈடுபட்டு வருவது தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்ட ரீதியாக ஒரு பக்கம் போராடிக்கொண்டிருந்தாலும், மக்களின் எதிர்ப்பினை ஒருங்கமைக்கப்பட்ட வடிவத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்கிற பொதுநல நோக்கில், நாளை (24.03.2018) முழு கடையடைப்பு நடத்துவது என தூத்துக்குடி நகர பொதுமக்களும் – வணிகர்களும் – கல்வி நிறுவனங்களும் – மீனவர்களும் முடிவெடுத்துள்ளனர்.
அதன்படி நடைபெற உள்ள இக்கடையடைப்பு போராட்டத்தின் மூலம் அப்பகுதி மக்களுக்கு நீதி கிடைக்கும் என நம்புகின்றோம். இப்போராட்டக் களத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சார்ந்த இந்திய ஜனநாயக கட்சி தோழர்கள் பெருமளவில் கலந்துகொண்டு, இப்போராட்டம் வெற்றிபெற ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.