இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் 2017 – 18 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தாமரபரணி – நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்கு ரூபாய் நூறு கோடியும், அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை செயல்படுத்த ரூ. 1,789 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை வரவேற்கின்றோம். மேலும் நீர் வள ஆதாரத்தை மேம்படுத்த ரூ.5,127 கோடியும், தமிழகம் முழுவதும் உள்ள சில குறிப்பிட்ட ஆறுகளில் தடுப்பணைகள் கட்ட ரூ.250 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீர் மேலாண்மையில் தமிழக அரசு கவனம் செலுத்தியுள்ளதை அறிகின்றோம்.
இவ்வாண்டிற்கான உணவு தானிய உற்பத்தி இலக்கு 110 லட்சம் மெட்ரிக் டன் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் மேட்டூர் அணையில் போதிய நீர் இன்றியும், தமிழகம் முழுவதும் நிலத்தடி நீரின் அளவு குறைந்து வருவதையும் ஒப்புநோக்கும் போது, இந்த உணவு தானிய உற்பத்தி இலக்கை எட்ட முடியுமா என்பது கேள்விக்குறியே. குழந்தைகளுக்கான கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தை செயல்படுத்த ரூபாய் 200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதையும், சுமார் 2 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கபடும் என்பதையும் வரவேற்கின்றோம்.
பொருள் மற்றும் சேவை வரிவிதிப்பு முறை அமலுக்கு வந்த பின், மாநில அரசின் வருவாய் சதவிகிதம் 6.99-ல் இருந்து 7.04-ஆக உயர்ந்திருக்கிறது. மேலும் 5 சதவிகிதம் அளவிற்கு வருவாய் உயரும் எனவும் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை மாநிலத்தின் வளர்ச்சியாக எடுத்துக்கொள்ளலாம். அதே வேளையில், கடன் அளவு ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருவதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுக்காதது கவலை அளிக்கின்றது. இந் நிதிநிலை அறிக்கையில் பொதுவான வரவு – செலவு கணக்குகள் இருந்ததே ஒழிய, நீண்ட கால திட்டங்களுக்கோ – தொழில் மற்றும் மின்சார உற்பத்திக்கோ எந்தவிதமான முன்னுரிமையும் வழங்கப்பட்டதாக தெரியவில்லை.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அரசின் மதுக்கடைகள் மூலம் ரூ.9,600 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும், ரூ.6,400 கோடி அளவிற்கே விற்பனையாகி உள்ளது. இதனை அரசின் வருவாய் இழப்பு என்கிற கண்ணோட்டத்தில் பார்க்காமல், மதுவிற்கு எதிரான மக்களின் மனநிலை வளர்ந்து வருகின்றது என உணர்ந்துகொண்டு, மது விற்பனை திட்டத்தை அரசு முற்றிலும் கைவிட வேண்டும். அரசின் நிதி பற்றாக்குறையை ஈடுசெய்ய, புதிய வரிகள் விதித்து மக்களின் மீது வரிச்சுமையை ஏற்றவில்லை என்கிற அளவிற்கு இந்த நிதிநிலை அறிக்கையை இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் வரவேற்கின்றோம்.
Powered by iPOT Technologies