-
திருச்சி துவாக்குடி சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்யவேண்டும் உயிழிந்த உஷாவின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு டாக்டர் பாரிவேந்தர் வலியுறுத்தல் -
தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரும் அவரின் மனைவி உஷாவும் இருசக்கர வாகனத்தில சென்றபோது, போக்குவரத்து காவல் ஆய்வாளரால் தாக்கப்பட்டு, கர்ப்பிணி பெண்ணான உஷா மரணமடைந்தார் என்கின்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் – வருத்தமும் அடைந்தேன். தலைக்கவசம் அணியாமல் செல்பவர்களை பிடிக்க போக்குவரத்துக் காவலர்கள் ஆய்வு நடத்தும்போது இதுபோன்ற அசம்பாவித சம்பவங்களும் – உயிரிழப்புகளும் பலமுறை நடந்துள்ளது.
போக்குவரத்து விதியை மீறும் வாகன ஓட்டிகள் மீது காவலர்கள் நடவடிக்கை எடுக்கும்போது,மிகுந்த கண்ணியத்துடனும் - பொறுப்புணர்ச்சியுடனும் நடந்துகொள்ள வேண்டுமென்று பலமுறை நாம் வலியுறுத்தியுள்ளோம். எனினும், சில காவலர்கள் அத்துமீறி பொதுமக்களை தாக்குவதும், தரக்குறைவாக பேசுவதுமான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாகத்தான் திருவெறும்பூரில் நடந்துள்ள இந்த சம்பவமாகும்.
காவலரின் ஆய்வுக்கு ஒத்துழைக்கவில்லை என்கிற சாதாரண காரணத்திற்காக போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் அவர்கள் எல்லை மீறி தன் அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளார். இருசக்கர வாகனத்தை மிகுந்த ஆவேசத்துடன் எட்டி உதைத்ததால் அவரும் – அவரின் கர்ப்பிணி மனைவியும் நிலைதடுமாறி விழுந்ததில், சம்பவ இடத்திலேயே கர்ப்பிணி பெண் உஷா மரணமடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இச்செய்தி அறிந்த அப்பகுதி பொதுமக்களும் – இளைஞர்களும் பெருமளவில் திரண்டுவந்து,கொடூரமான இந்த மரணத்திற்கு நீதிகோரி சாலைமறியல் செய்துள்ளனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டிருந்த நிலையில், காவல் துறையினர் அவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர். பின்னர்சிலர்மீது வழக்கு பதிவுசெய்தும், மேலும் சிலரை கைதுசெய்தும் விசாரனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அவர்கள் மீது பொதுச்சொத்து மற்றும் வாகணங்களை சேதப்படுத்தியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது.நடைபெற்ற இச்சம்பவத்தின் மூலம் பொதுமக்கள் கோபப்படுவதும் – காவலர்களுக்கு எதிராக நடவடிக்கை கேட்பதிலும் நாம் தவறு காணமுடியாது.
மேலும், இச்சம்பவத்தின் மீது தானாக விசாரனையை மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள், ‘காவல் ஆய்வாளரின் இச்செயல் கிரிமினல் குற்றத்திற்கு சமமானது’ எனக்கூறியுள்ளார்.எனவே இச்சம்பவத்தைக் கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டுமெனவும் - வழக்கு பதிவு செய்யப்பட்டதை திரும்ப பெறவேண்டும் எனவும் –உயிரிழந்த உஷாவின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையினை வழங்கவேண்டுமெனவும்தமிழக அரசை கேட்டுக்கொள்கின்றேன்.