-
6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி - மாண்புமிகு பிரதமருக்கு IJK நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் கடிதம் -
To
The Hon. Prime Minister
Govt of India.
New Delhi.
பெருமதிப்பிற்குரிய பாரதப்பிரதமர் அவர்களுக்கு, வணக்கம்.!
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் –தலைவர் என்கிற முறையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இக்கடிதத்தினை எழுதுகின்றேன்.
கடந்த 16.02.2018 அன்று காவிரி நதிநீர் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தமிழக மக்களிடையே ஒருபுறத்தில் மகிழ்ச்சியையும், இன்னொரு புறத்தில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
- இன்னும் 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்.
- காவிரி நதி எந்த மாநிலத்திற்கும் சொந்தமானதல்ல.
- காவிரி நதிநீர் குறித்த பழைய ஒப்பந்தங்கள் அனைத்தும் செல்லுபடியாகும்.
என்கிற முக்கியமான சில அம்சங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ள இத்தீர்ப்பு தமிழர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த காவிரி நீரின் அளவு14.75 டி.எம்.சி குறைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sir, தங்களின் மேலான கவனத்திற்கு ஒரு சிறிய விவரத்தினை இங்கு தெரியபடுத்த விரும்புகின்றேன். 1991-ம் ஆண்டு காவிரி நடுவர்மன்றம் 205 டி.எம்.சி காவிரி நீரை தமிழகத்திற்கு தரவேண்டும் என இடைக்கால உத்தரவு வழங்கியது. பின்னர் 2007-ம் ஆண்டு வழங்கிய இறுதித் தீர்ப்பில் 13டி.எம்.சி குறைக்கப்பட்டு, 192 டி.எம்.சி தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவின்மீது 16.02.2018-ல் வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பில், 14.75 டி.எம்.சி குறைக்கப்பட்டு 177.25 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என நீதியரசர் தீபக் மிஸ்ரா அவர்களின் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது. அதே வேளையில் கர்நாடகத்திற்கு 170 டி.எம்.சி-யிலிருந்து 184.75 டி.எம்.சி-யாக உயர்த்தப்பட்டுள்ளது.இதனால் காவிரி நதிநீர் ஒப்பந்தத்தில் தமிழகத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவே நாங்கள் கருதுகின்றோம்.
மேலும், காவிரி நதியின் வடிகால் மாநிலமாகவே இதுவரை தமிழகம் இருந்துள்ளது. நதிநீரின் ஜீவாதார உரிமையுள்ள ஒரு மாநிலத்திற்கான எந்த உரிமையையும் இதுநாள் வரை தமிழகம் பெறவில்லை.
காவிரி நதியின் மீதான உரிமைகளை தமிழகம் பெறவேண்டுமானால், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளபடி, 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். எனவே தாங்கள் இதற்கான முன் முயற்சிகளை எடுத்து மேலாண்மை வாரியம் அமைக்கவும், அதனையடுத்து காவிரி கண்காணிப்பு குழுவை அமைக்கவும் உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.