-
தமிழகத்திற்கான தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது பற்றி காவிரி மேலாண்மை வாரியத்தில் முறையீடு செய்யவேண்டும் - தமிழக அரசிற்கு டாக்டர் பாரிவேந்தர் வலியுறுத்தல்
காவிரி நடுவர்மன்ற மேல்முறையீட்டு வழக்கில் இன்று (16.02.2018) வழங்கப்பட்ட தீர்ப்பு மகிழ்ச்சியையும் -அதிர்ச்சியையும் ஒரே நேரத்தில் அளித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்படவேண்டும் என மத்திய அரசிற்கு உத்தரவிட்டுள்ளது மகிழ்ச்சியையும், தமிழகத்திற்கான நீரின் அளவை 14.75 டி.எம்.சி அளவிற்கு குறைத்தது அதிர்ச்சியையும் அளிக்கின்றது. மேலும் காவிரி நதி தங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடிய கர்நாடக அரசிற்கு பதிலடி தரும் வகையில், “நதியை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது” எனவும், “காவிரி நதி இந்தியாவின் தேசிய சொத்து” எனவும் தனது தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கருத்துக்களாகும்.
1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போதுதான், காவிரி உற்பத்தியாகும் குடகுமலை, கர்நாடக மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. அதிலிருந்து காவிரி நதியின் ஏகபோக உரிமையாளராக தங்களை கருதிக்கொண்டு வந்த கர்நாடகத்தின் மேட்டிமைவாதம் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்மூலம் உடைத்தெறியப்பட்டுள்ளது.
1991-ம் ஆண்டு காவிரி நடுவர்மன்றம் 205 டி.எம்.சி காவிரி நீரை தமிழகத்திற்கு தரவேண்டும் என இடைக்கால உத்தரவு வழங்கியது. பின்னர் 2007-ம் ஆண்டு வழங்கிய இறுதித் தீர்ப்பில் 13 டி.எம்.சி குறைக்கப்பட்டு, 192 டி.எம்.சி தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவின்மீது இன்று வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பில் 14.75 டி.எம்.சி அளவிற்கு குறைக்கப்பட்டு 177.25 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டும் என நீதியரசர் தீபக் மிஸ்ரா அவர்களின் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது. அதே வேளையில் கர்நாடகத்திற்கு 180 டி.எம்.சி-யிலிருந்து184.75 டி.எம்.சி-யாக உயர்த்தப்பட்டுள்ளது.
இத்தீர்ப்பின் மூலம் தமிழகத்திற்கான நதிநீர் பங்கீட்டில் மிகப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவே கருதுகின்றோம். பெங்களூர் மாநகரின் குடிநீர் தேவைக்காக 14.75 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்தின் பங்கிலிருந்து பிரித்துக்கொடுப்பது முறையான செயலாக தெரியவில்லை. இதற்கு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள காரணம் விசித்திரமானது. தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் 20 டி.எம்.சி அளவிற்கு நிலத்தடி நீர் இருப்பதாகவும், இதனை நடுவர் மன்றம் கருத்தில் கொள்ளவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்பற்றாக்குறை – பருவ மழை பொய்த்தல் – மழையில்லாக் காலங்களில் காவிரி நதி வறண்டு கிடத்தல் ஆகிய காரணங்களால் நிலத்தடி நீர் பல நூறு மீட்டர் ஆழத்திற்கு சென்றுகொண்டிருப்பதை நடைமுறை ரீதியிலேயே நன்கு உணரமுடியும். எனவே நிலத்தடி நீர் என்கின்ற காரணத்தைக் காட்டி 14.75 டி.எம்.சி அளவிற்கான காவிரி நீரை குறைத்துள்ளதை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளக் கூடாது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டவுடன், இழந்த நீரின் அளவைத் திரும்பப்பெற, மேற்முறையீடு செய்யவேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கின்றேன்.