• “நீண்டகாலத் திட்டங்களுக்கு முன்னுரிமை தரும் பட்ஜெட்” - மத்திய நிதிநிலை அறிக்கைக்கு டாக்டர் பாரிவேந்தர் வரவேற்பு -

   தேசிய ஜனநாயகக் கூட்டணியின், பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான, மத்திய அரசின் 2018 – 19 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை இன்று(01.02.2018) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு, பண மதிப்பிழப்பு போன்ற முற்போக்கான பொருளாதார திட்டங்கள் செயல்படுத்த தொடங்கிய பின்னர், தாக்கல் செய்யப்படும் முதலாவது நிதிநிலை அறிக்கை என்கிற வகையில் இந்த பட்ஜெட் மீது கூடுதல் எதிர்பார்ப்பு நிலவியது.

  பல்வேறு மாநிலங்கள் அறிவிக்கும் கவர்ச்சிகரமான இலவச திட்டங்கள், வாக்கு வங்கியை குறிவைத்து வெளியிடப்படும் மலிவான அறிவிப்புகள் போன்ற எளிமையான திட்டங்களுக்கு முக்கியத்துவம் தராமல் நீண்டகாலத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

  நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றிய நிதியமைச்சர் திரு.அருண்ஜெட்லி அவர்கள் உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழும் என கூறியுள்ளார். மேலும், 7.5 சதவிகித பொருளாதார வளர்ச்சி என்பது வரும் நிதியாண்டில் 8 சதவிகிதமாக உயர்த்தப்படும் எனவும் கூறியுள்ளார். அவரின் இந்த நம்பிக்கை நிறைவேறும் என்பதற்கு அறிகுறியாக இவ்வாண்டும் நிதிப்பற்றாக்குறை தொடர்ந்து குறைந்துகொண்டே வருவதை குறிப்பிடலாம்.

  பொருளாதாரத்தில் நலிவுற்ற 4 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் எனவும், மூன்று நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஒரு மருத்துவமனை அமைக்கப்பட்டு10 கோடி ஏழைக்குடும்பங்களுக்கு ரூபாய் 5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை காப்பீடு அளிக்கப்படும் எனவும் இந்த படஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதை பாராட்டலாம்.

  மேலும், 2022-ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருவாய் 2 மடங்காக உயர்த்தப்படும் எனவும், 2020-ஆம் ஆண்டிற்குள் 70 லட்சம் இளைஞர்களுக்கு வேலை அளிக்கப்படும் எனவும், இதற்காக 50 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் எனவும் இந்த நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

   மொத்தத்தில் நாட்டின் தொழில் வளர்ச்சி  - விவசாய உற்பத்தியைப் பெருக்குதல்– இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் – கட்டுமான துறைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்தல் போன்ற முற்போக்கு திட்டங்கள் நிறைந்துள்ள மத்திய அரசின் இந்த நிதிநிலை அறிக்கையை, ‘பொருளாதார அறுவை சிகிச்சை’யாகவே கருதி, வரவேற்கின்றோம்.