• தமிழ் மரபிசைக்கும் மேலை நாட்டு நவீன இசைக்கும் பாலமாக இருந்து சாதனை படைத்தவர் இளையராஜா இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட ‘பத்ம’ விருது பெற்றவர்களுக்கு டாக்டர் பாரிவேந்தர் வாழ்த்து

    தமிழகத்தின் மரபார்ந்த இசையை உலக அளவில் கொண்டுசெல்லவும், அதேபோல் மேலை நாட்டு நவீன இசையை தமிழக மக்களின் ரசனைக்கு ஏற்ப விருந்துபடைக்கவும் பாலமாக இருந்து செயல்பட்டவர் இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள். தனது அபரிமிதமான இசைத் திறமையாலும் – பின்னணி இசை கோர்ப்பின் நுணுக்கத்தாலும் “இசைஞானி என அழைக்கும் தகுதி படைத்தவராக விளங்குகிறார்.  

    1976 ஆம் ஆண்டு முதல் சுமார்  42 ஆண்டுகளாக இசைத்துறையில் சாதனை படைத்துவரும் திரு இளையராஜா அவர்கள், நான்கு முறை சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினையும் – 2010-ம் ஆண்டு பத்ம பூஷண் விருதினையும் – தமிழக, ஆந்திர, கேரள மற்றும் இந்தி மொழி பேசும் மாநிலங்களின் உயரிய விருதுகளையும் பெற்றிருக்கிறார். அவரின் இசை ஆளுமையைப் போற்றும் வகையில், இவ்வாண்டிற்கான இந்தியாவின் மிக உயரிய “பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. 

    மேலும் தமிழகத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் திரு.நாகசாமி அவர்களுக்கு “பத்ம பூஷண் விருதும், பேராசிரியர் ராஜகோபாலன், நாட்டுப்புற இசைப்பாடகி விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், யோகா பயிற்சியாளர் திருமதி ஞானாம்பாள், வனவிலங்கு ஆர்வலர் ரோமுலஸ் விட்டாகர் ஆகியோருக்கு “பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதினைப் பெறும் தமிழகத்தைச் சேர்ந்த சாதனையாளர்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.