நேற்று (23.01.2018) நள்ளிரவு முதல், பெட்ரோல் விலை ரூபாய் 75.06 என்கிற அளவில் உயர்ந்து மாபெரும் வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு சாதனை என்பது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இடையே அதிருப்தியையும் -அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. கச்சா எண்ணெய் விலைக்கு தகுந்தவாறு பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை நிர்ணயிப்பது என கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு முடிவெடுத்தது.
அதன்படி இந்தியாவிலுள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் - இந்தியன் ஆயில் மற்றும் பாரத் பெட்ரேலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்குத் தகுந்தவாறு ஒவ்வொரு மாதமும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயித்தன.
பின்னர், இவ்விலை நிர்ணயம் மாதத்திற்கு இரண்டு முறை என மாற்றி அமைக்கப்பட்டது. கடந்த 2017 ஜூன் மாதம் முதல் தினசரி விலை நிர்ணயம் என்கிற முடிவினை மத்திய அரசு மேற்கொண்டது. இதனால் ஒவ்வொரு நாளும் வாடிக்கையாளர்கள் சிறுகச்சிறுக கண்ணுக்குத் தெரியாத வகையில் ஏற்றப்படும் விலை உயர்வை அறியாமலேயே பெட்ரோல் டீசலை நிரப்பிக் கொண்டிருக்கின்றனர். குறப்பாக கடந்த 2017 ஜூன் மாதம் ரூபாய்65.46என்கிற அளவில் இருந்த பெட்ரோல் விலை, தற்பொழுது 10 ரூபாய் அளவிற்கு உயர்ந்து75.06 என விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வேகமாக குறைந்த போதிலும் இந்தியாவில் எரிபொருட்களின் விலை நிதானமாகவே குறைக்கப்பட்டிருக்கிறது. அதிலேயும் தினசரி விலை நிர்ணயம் என்கிற முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர், பெட்ரோல் – டீசலின் விலை ஒவ்வொரு நாளும் ஏறுமுகமாகவே இருந்துள்ளது. காரணம் மத்திய அரசின் கலால் வரி,மற்றும் மாநில அரசுகளின் விற்பனை வரியால் இவ்விலையேற்றம் கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
அதாவது, மத்திய அரசின் கலால்வரி பெட்ரோலுக்கு ரூ.21-ம், டீசலுக்கு ரூ.18-ம் என விதிக்கப்படுகிறது. மேலும், வாட்வரி பெட்ரோலுக்கு 36 சதவீதமும், டீசலுக்கு 25 சதவீதமும் என்று உள்ளது. இதனால்தான் எரிபொருட்களின் விலை, உற்பத்தி விலயைவிட பல மடங்கு உயர்ந்துள்ளது.
இவ்விலையேற்றம் குறித்து மத்திய அமைச்சர்கள் கருத்து தெரிவிக்கும் பொழுது மாநில அரசுகளின் விற்பனை வரியைக் குறைத்து விலை குறைப்பை கொண்டுவரலாம் எனக் கூறுகின்றனர். அதே வேளையில் மாநில அரசுகளோ, மத்திய அரசின் கலால் வரி பெருமளவு உள்ளதால் அவர்கள்தான் வரியைக் குறைக்க வேண்டுமென மத்திய அரசின் மீது பொறுப்பைச் சுமத்திவிடுகிறார்கள். இப்படி
மத்திய – மாநில அரசுகளின் விட்டுக்கொடுக்காத மனோபாவத்தினால் சிரமத்திற்குள்ளாவது பொதுமக்களும் – வியாபாரிகளும்தான்.
தொடர்ந்து பெட்ரோல் – டீசல் விலை உயர்ந்து வரும் போக்கு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும். இவ்விலையேற்றத்தைக் காரணமாக வைத்து,சரக்கு போக்குவரத்துக் கட்டணம் உயர்த்தப்படுவதால் இந்தக் கூடுதல் சுமையினை பொதுமக்கள் சுமக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகிறார்கள்.
ஏற்கனவே பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல் – டீசல் விலை உயர்வு, அவர்களை மேலும் துன்பச்சுழியில் தள்ளுவதற்கு ஒப்பாகும். எனவே பொதுமக்களின் சுமையை குறைக்கின்ற வகையில் மத்திய அரசு கலால் வரியைக் குறைக்கவும் – மாநில அரசுகள் விற்பனை வரியை குறைக்கவும் முன்வரவேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.
Powered by iPOT Technologies