• டில்லி மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்துவந்த தமிழக மாணவர் மர்ம மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தவேண்டும் - மத்திய அரசுக்கு டாக்டர் பாரிவேந்தர் வலியுறுத்தல் -

    திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையத்தைச் சேர்ந்த சரத்பிரபு அவர்கள் கோவை மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு, கடந்த ஆண்டு ஜுன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி மருத்துவக்கல்லூரியில், தகுதியின் அடிப்படையில் மருத்துவ மேற்படிப்பிற்கு சேர்ந்துள்ளார்.

     

    படிப்பில் சிறந்து விளங்கிய சரத்பிரபு, இன்று காலை விடுதியின் கழிவறையில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக, அவரின் தந்தை செல்வமணிக்கு மருத்துவமனை நிர்வாகிகள் மூலம் தகவல் கூறப்பட்டுள்ளது. இச்செய்தி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில் மாணவர் சரத்பிரபு தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை என அவரின் பெற்றோர்கள் உறுதியாகக் கூறியுள்ளனர்.

     

    அவரின் மர்ம மரணம் பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இவரின் மரணம் மூலம் ஆதாயம் அடையப்போகிறவர்கள் யார் என்கிற கோணத்தில் காவல்துறை விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.

     

    கடந்த 2016 –ஆம் ஆண்டு, இதேபோல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மேற்படிப்பு படித்துக்கொண்டிருந்த திருப்பூர் மாணவர் சரவணனும் மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த மர்ம மரணம் கொலையா..? தற்கொலையா..? என்கிற விடை தெரியா முன்னமே மீண்டும் ஒரு தமிழக மாணவர் மர்மமான முறையில் இறந்துவிட்டார் என்றால், அதன் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக்கொள்கின்றேன்.