• திரு. ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் பிரவேசம் தமிழக அரசியலில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் - டாக்டர் பாரிவேந்தர் வரவேற்பு-

    நீண்ட நாட்களாக தமிழக மக்களிடம் இருந்த கேள்விக்கும், எதிர்பார்பிற்கும் இன்று விடை சொல்லியிருக்கிறார் திரு.ரஜினிகாந்த் அவர்கள். தான் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாகவும், வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார். 

    அவர் புகழ் பெற்ற வெறும் நடிகராக மட்டுமல்லாது, அவ்வப்பொழுது ஏற்படும் அரசியல் – சமூக நிகழ்வுகளுக்கு ஏற்ப குரல் கொடுப்பவராகவும் இருந்துள்ளார். இதனால் அவரின் அரசியல் நுழைவு பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியதில் வியப்பில்லை. 

    கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் நான் போட்டியிட்ட போது, தொலைபேசியில் என்னை அழைத்து, நான் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்தார். தேசப்பற்றும், நேர்மறையான சிந்தனையும், நல்ல உள்ளமும் கொண்ட அரசியல் தலைவர்களுக்கான பஞ்சம் தமிழகத்தில் நிலவுகிறது. இந்நேரத்தில் திரு ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் நுழைவு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. அவ்வகையில், திரு. ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் பிரவேசத்தை வரவேற்பதோடு, அவரின் நல்ல நோக்கங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகின்றேன்.