-
ஆர் கே நகர் இடைத்தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவு ஐஜேகே நிறுவனர் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அறிவிப்பு
நவீன சிந்தனைகளுடன் – ஆக்கப்பூர்வமான கொள்கைகளை வகுத்து செயல்பட்டுவரும் இந்திய ஜனநாயகக் கட்சி, தன் கருத்துக்களை – மக்களிடம் கொண்டுசெல்ல தேர்தல் களங்களை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி வந்திருக்கிறது. அவ்வகையில், நடைபெற உள்ள ஆர். கே. நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதென முடிவெடுத்து, வேட்பாளரும் அறிவிக்கப்பட்டார்.
மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும், ஐஜேகேவின் கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா கட்சி,இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுமா? என்கிற உறுதியான நிலைப்பாடு தெரியாத காரணத்தால், நாம் அவசியம் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஜனநாயக கடமையாற்றவேண்டும் என கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
குறிப்பாக 24-11-2017 அன்று திருச்சியில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், தேர்தலில் போட்டியிடுவது என ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 26-11-2017 அன்று சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், மத்திய சென்னை மாவட்டத் தலைவர் திரு.லெனின் அவர்கள் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சி இத்தேர்தலில் போட்டியிடும் என அதன் தமிழ் மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் அவர்கள் கடந்த 28 ம்தேதி செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்தார்.
பின்னர், ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பாஜகவின் வேட்பாளராக திரு.கரு.நாகராஜன் அவர்கள் போட்டியிடுவார் என நேற்று அறிவிக்கப்பட்டது. உடனடியாக, பாஜகவின் மேலிட நிர்வாகிகள் என்னை தொடர்பு கொண்டு, “ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஐஜேகே போட்டியிடாமல், பாஜகவை ஆதரிக்கவேண்டும்” என கேட்டுக்கொண்டனர்.
இதனையடுத்து, இந்திய ஜனநாயக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. அதன் அடிப்படையில்,பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் நீண்ட நாளைய தோழமை கட்சி என்கிற வகையிலும்,கூட்டணி நெறிமுறைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் இந்த இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரிப்பதென தீர்மானிக்கப்பட்டது.
எனவே, சூழ்நிலையின் தன்மை கருதி, கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் – குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் பொறுப்பாளர்களும், மகளிர் அணியினரும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றி, அவரின் வெற்றிக்கு பாடுபடவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.