-
உச்சநீதிமன்ற உத்தரவினைக் காரணம் காட்டி மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறக்கக்கூடாது - தமிழக அரசுக்கு டாக்டர் பாரிவேந்தர் வலியுறுத்தல் -
தமிழகத்தின் ஊரக பகுதி மற்றும் நகரப்பகுதி நெடுஞ்சாலைகளில் ஏற்கனவே மூடப்பட்ட டாஸ்மார்க் மதுபானக் கடைகளை மீண்டும் திறந்துகொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து இன்று (13.11.2017) வழங்கியுள்ள தீர்ப்பு தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் இருக்கும் மதுக்கடைகளை மூடிவிடவேண்டும் என, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களில் பெரும்பாலானவை மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதாலேயே ஏற்படுகின்றது என பொதுநல வழக்கு தொடர்ந்ததன் அடிப்படையில், உச்சநீதிமன்றம் இத்தீர்ப்பினை வழங்கியிருந்தது.
இதனை எதிர்த்து அனைத்து மாநிலங்களின் சார்பிலும், கடந்த மார்ச் மாதம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த உச்சநீதிமன்றம், 20 ஆயிரத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட ஊரக மற்றும் நகரப்பகுதிகளுக்கு அருகே அமைந்துள்ள நெடுஞ்சாலைகளில் 220 மீட்டர் தூரத்திற்குள் இருக்கும் மதுக்கடைகளை மட்டும் மூடினால்போதும் என உத்தரவிட்டது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி மதுக்கடைகளை மூடினால் அரசுக்கு போதிய வருமானம் கிடைக்காது எனக்கருதி,மாநில நெடுஞ்சாலைகளை, மாவட்ட நெடுஞ்சாலைகள் என்ற பட்டியலின்கீழ் கொண்டுவர தமிழக அரசு உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் முயற்சித்தன.
இதனை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதி தீபக்மிஸ்ரா அவர்கள் தலைமையிலான அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, தமிழக அரசின் வாதங்களை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் -மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளின் அருகாமையில் இருந்து அகற்றப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறந்துகொள்ளலாம் என தீர்ப்பளித்திருக்கின்றது. இத்தீர்ப்பு மதுவிலக்கிற்கு ஆதரவாக போராட்டம் நடத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் சமூக நல அமைப்புகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
2016 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, அப்போதைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள், “மீண்டும் தான் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கினை அமல்படுத்துவேன்” என வாக்குறுதி அளித்திருந்தார்.அதனை நிறைவேற்றும் வகையில், 2016-ல் ஆட்சிப்பொறுப்பேற்றவுடனேயே சுமார் 500 மதுக்கடைகளை மூடுவதற்கு உத்தரவும் இட்டார். அவரின் மறைவிற்கு பின்னர் தொடர்ந்து நடைபெறும் அதிமுக ஆட்சி, ஜெயலலிதாவின் தேர்தல் வாக்குறுதியை அலட்சியம் செய்யும் வகையில், மதுக்கடைகளை திறப்பதிலேயே குறியாக உள்ளது. புதியதாக டாஸ்மார்க் மதுக்கடைகள் அமைத்தாலோ, அல்லது ஏற்கனவே நடப்பிலுள்ள மதுக்கடைகளை வேறு இடத்திற்கு மாற்றினாலோ, பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் வெகுண்டெழுந்து அரசிற்கு எதிராக ஆப்பாட்டம் நடத்துவதை அன்றாடம் பார்த்துவருகின்றோம்.
அன்புடன்,(டாக்டர் பாரிவேந்தர்) நிறுவனர் தலைவர்
இந்திய ஜனநாயக கட்சி