-
நாட்டு நடப்புகளை எளிய தமிழில் எடுத்துரைத்த, தமிழக செய்தித்துறையின் முன்னோடி தினத்தந்தி IJK நிறுவனர் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் வாழ்த்து
கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் வெளிவந்து கொண்டிருந்த செய்தித்தாள்கள் அனைத்தும், மெத்தப்படித்த மேல்தட்டினருக்காகவே இருந்தது. பண்டிதத்தமிழில் வெளிவந்துகொண்டிருந்த செய்திப்பத்திரிக்கைகள், பாமரமக்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்துவந்த சூழலை மாற்றி, எளிய தமிழ் – இனிய நடை – சுருக்கமான வரிகள் என்கிற புதிய உத்தியை தமிழ்பத்திரிக்கை உலகில் அறிமுகப்படுத்தி, மாபெரும் அறிவுப்புரட்சியை ஏற்படுத்தியவர் ‘தமிழர் தந்தை’ திரு.சி.பா.ஆதித்தனார் அவர்கள்.
பிற பத்திரிக்கைகள், உலகச் செய்திகள் மற்றும் தேசியச்செய்திகளை மட்டுமே பதிப்பித்துக்கொண்டிருந்த நிலையில், மாநிலச்செய்திகளுக்கும் உள்ளூர் செய்திகளுக்கும் முதன்மையான அங்கீகாரம் கொடுத்து, வெகுமக்களையும் எழுத்தெண்ணி படிக்கவைத்தது தினத்தந்தியின் சாதனையாகும். இந்த அளப்பறிய சாதனையை நிகழ்த்திக்காட்டிய திரு.சி.பா.ஆதித்தனார் அவர்களின் விடாமுயற்சியால் தொடங்கப்பட்ட ‘தினத்தந்தி’ இன்று 75 ஆண்டுகளை நிறைவு செய்து – பவளவிழா கொண்டாடுகின்றது.
தமிழ்நாட்டிற்கான தேவைகள் – உரிமைகள் ஆகியவற்றைப்பெற, அதற்கான காரண காரியங்களை பொதுமக்களிடம் கொண்டுசெல்லும் தினத்தந்தியின் தார்மீகக் கடமை என்றும் தொடரவேண்டும் என இப்பவளவிழா நன்னாளில் வாழ்த்தி மகிழ்கின்றேன்.
அன்புடன்,
டாக்டர் பாரிவேந்தர்
நிறுவனர் தலைவர்
இந்திய ஜனநாயகக் கட்சி