-
மாணவர்களுக்கு விடாப்பிடியுடன் போராடி வெற்றிகொள்ளும் மனத்திடம் வேண்டும் -மாணவி அனிதா தற்கொலை குறித்து டாக்டர் பாரிவேந்தர் இரங்கல்
அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 1,176 மதிப்பெண் பெற்றிருந்த மாணவி அனிதா மருத்துவப்படிப்பிற்கான கனவுகளுடன் வாழ்ந்துள்ளார். எனினும் ‘நீட்’ தேர்வில் போதிய மதிப்பெண் பெறாததால், மனமுடைந்து, அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
‘நீட்’ தேர்வு தொடர்பான குழப்பங்கள் தமிழக மாணவர்களை பெருமளவில் பாதித்துள்ளது. அகில இந்திய அளவில் மற்ற மாநில மாணவர்களெல்லாம் இத்தேர்வினை தைரியமுடன் எதிர்கொண்ட நிலையில், தமிழக மாணவர்கள் மட்டும் ஒருவித அச்சத்துடனேயே இத்தேர்வினை எழுதியுள்ளனர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றியமைக்கப்படாத பாடத்திட்டங்களே தமிழக மாணவர்களை தளர்வுறச்செய்துள்ளது.
உச்சநீதிமன்றம் வரை சென்று ‘நீட்’ தேர்விற்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்திய மாணவி அனிதா, வாழக்கைப் போராட்டத்தில் தோல்வியடைந்து விட்டார் என்பது வேதனைக்குரியதாகும். படிப்பில் சிறந்து விளங்கிய அந்த மாணவியை இழந்துவாடும் அவரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன். மேலும், மாணவர்கள் சிறுசிறு தோல்விகளை கண்டு அஞ்சாமல் எந்த தேர்விலும் விடாப்பிடியுடன் போராடி வெற்றிகொள்ளும் மனத்திடத்தை பெற்று முன்னேற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.