-
தடகள விளையாட்டு வீரர் மாரியப்பனுக்கு மத்திய அரசின் அர்ச்சுனா விருது - டாக்டர் பாரிவேந்தர் வாழ்த்து
விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும், மத்திய அரசின் உயரிய அர்ச்சுனா விருது, தடகள விளையாட்டு வீரர் திரு.மாரியப்பன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிரேசிலின் ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் தொடர்ச்சியாக, பாரா ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் வெற்றி பெற்று – தங்கப்பதக்கமும் பெற்று - இந்தியாவிற்கு பெருமையைத் தேடித்தந்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பெரிய வடகம்பட்டி எனும் கிராமத்தில் பிறந்த மாரியப்பன் இன்று உலகம் போற்றும் விளையாட்டு வீரராக உயர்ந்துள்ளார். 2012-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். அவரின் இந்த சாதனையே ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொள்ளும் தகுதியாகத் திகழ்ந்தது. தன் தகுதியை தேசத்தின் பெருமையாக உயர்த்தியிருப்பது அவரின் சிறப்பாகும்.
அவரின் வெற்றியை கௌரவிக்கும் வகையில், இவ்வாண்டிற்கான பத்மஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டது. மேலும், ‘புதிய தலைமுறையின் தமிழன் விருது’களில், திரு.மாரியப்பன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அவருக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில், விளையாட்டு வீரர்களுக்காக வழங்கப்படும் இந்தியாவின் மிக உயரிய விருதான ‘அர்ச்சுனா விருது’ அளிக்கப்பட்டுள்ளது. திரு.மாரியப்பன் அவர்களுக்கு என் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்வதோடு, மேலும் பல சாதனைகள் மூலம் அவர் போற்றப்படவேண்டும் எனவும் வாழ்த்துகின்றேன்.