-
குடியரசு துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாஜக மூத்த தலைவர் திரு.வெங்கையா நாயுடு அவர்கள் தென்னிந்திய மக்களின் உரிமைக்குரலாக டெல்லியில் ஒலிப்பவர். - IJK நிறுவனர் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் வாழ்த்து
குடியரசு துணைத்தலைவர் பதவிக்கு நடைபெற உள்ள தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் மத்திய அமைச்சரும், பாஜக-வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மாண்புமிகு வெங்கையா நாயுடு அவர்கள் போட்டியிடுவார் என்கிற செய்தியறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
திரு.வெங்கையா நாயுடு அவர்கள், தனது இளமைக்காலம் தொட்டு இந்திய தேசத்தின் பால் மாறாத பற்றும் அதன் பன்முக ஒருங்கிணைப்பில் சமரசம் இல்லாத உறுதியும் கொண்டவராக இருந்துள்ளார். இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெறும் சவாலாக விளங்கிய “நெருக்கடி நிலை” (எமர்ஜென்ஸி) அமலில் இருந்த 1975-ம் ஆண்டுகளில், அதனை எதிர்த்து வலிமையுடன் போராடியுள்ளார். 1978-ம் ஆண்டு தொடங்கி சட்டமன்ற உறுப்பினர் – நாடாளுமன்ற உறுப்பினர் – மத்திய அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து திறம்பட செயலாற்றியுள்ளார்.
மேலும், முன்னாள் பிரதமர் திரு.வாஜ்பாய் அவர்களிடத்தில் பெருமதிப்பு கொண்டவராக விளங்கிய திரு.வெங்கையா நாயுடு அவர்கள், மத்தியில் பாஜக ஆளும் கட்சியாக இருந்த 2002-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக இரண்டு முறை தேர்வாகி, அக்கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருந்துள்ளார். அதேபோல் 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற திரு.நரேந்திரமோடி அவர்களுடன் இணைந்து நாடுமுழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார்.
மிகச்சிறந்த பேச்சாளராகவும் – பன்மொழி வித்தகராகவும் - அரசியல் பண்பாட்டில் உயர்ந்த மனிதராகவும் – தான் ஏற்றுக்கொண்ட கொள்கைகள் வெற்றிபெற, அதற்காக பணியாற்றும் கடமை தவறாத தொண்டராகவும் – தன் கட்சியை வளர்த்தெடுப்பதில் தளர்வுறாத தலைவராகவும் விளங்கும் திரு.வெங்கையநாயுடு அவர்கள், தலைநகர் டெல்லியில் - தென்னிந்திய மக்களின் உரிமைக்குரலாக ஒலிக்கும் போராளியாகவும் விளங்குபவர் என்பதை மறுக்க முடியாது.
அப்படிப்பட்ட சிறந்த தலைவர் இந்திய குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் வெற்றிபெற்று, நம் தேசத்தின் ஜனநாயகம் மேலும் வலுப்பெற முன்மாதிரியாக இருப்பார் எனக்கூறி, அவருக்கு என் இதயமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.