-
“மிகச்சிறந்த நாடாளுமன்றவாதியாக திகழ்ந்தவர் இரா.செழியன்” முன்னாள் எம்.பி இரா.செழியன் மறைவிற்கு - டாக்டர் பாரிவேந்தர் இரங்கல்
திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் சகோதரரும் – பேரறிஞர் அண்ணா அவர்களின் அரசியல் செயல்பாடுகளில் உறுதுணையாக விளங்கியவருமான திரு.இரா.செழியன் அவர்கள் இன்று (06.06.2017) இயற்கை எய்தினார் என்கிற செய்தியறிந்து மிகவும் வருத்தமடைகின்றேன்.
திரு.இரா.செழியன் அவர்கள் 1957, 1962 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றிபெற்று, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும், 1978 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். அக்கால கட்டங்களில் தமிழகத்தின் பல்வேறு தேவைகள் – உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்த திரு.செழியன் அவர்கள், சிறந்த நாடாளுமன்றவாதியாக போற்றப்பட்டார்.
அவரின் மறைவு திராவிட இயக்க கொள்கையாளர்களுக்கு மட்டுமன்றி, தேசிய சிந்தனை உடையவர்களுக்கும் பேரிழப்பாகும். அவரின் மறைவால் வாடும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் – அரசியல் ரீதியாக அவருடன் நட்பு பாராட்டி வந்தவர்களுக்கும் என் சார்பிலும், இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.