-
தீவிரவாதிகளின் வெறிச்செயலைத் தடுக்க மத்திய அரசு மேலும் கடுமையான போக்கினை கையாள வேண்டும் காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவவீரர் மணிவண்ணன் குடும்பத்தினருக்கு டாக்டர் பாரிவேந்தர் இரங்கல்
ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், முண்டா எனும் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் அணிவகுப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, மறைந்திருந்த காஷ்மீர் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் தேப்பனந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மணிவண்ணன் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். அவரின் உடல் இன்று முறைப்படி அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இத்துயரமான சம்பவம் நடந்தமை குறித்து மிகுந்த வருத்தமடைகின்றேன்.
தீவிரவாதிகளின் வெறிச்செயலை தடுத்து நிறுத்த, மத்திய அரசு மேலும் கடுமையான போக்கினை கையாள வேண்டும். உயிரைப் பணயம் வைத்து, நாடு காக்கும் தியாக வேள்வியை ஏற்றுக் கொண்டுள்ள ராணுவ வீரர்களின் மன உறுதியை, இதுபோன்ற கோழைச் சம்பவங்களின் மூலம் சீர்குலைக்க முடியாது என்பதனை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
தற்போதைய நிலையில், உயிரிழந்த ராணுவ வீரர் மணிவண்ணன் அவர்களின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு, அரசு வேலை வழங்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கின்றேன். மேலும், இளம் வயதிலேயே மரணத்தை தழுவிய மணிவண்ணன் குடும்பத்தினருக்கு என் சார்பிலும், இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.