• மக்கள் நலன் கருதி தமிழக அரசும் – போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களும் சுமூக உடன்பாட்டிற்கு வரவேண்டும் - டாக்டர் பாரிவேந்தர் வலியுறுத்தல்

    தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் இன்று (16.05.2017) இரண்டாவது நாளாக தொடர்கின்றது. தமிழகம் முழுவதும் இருபது சதவீதத்தில் இருந்து, முப்பது சதவீதம் அளவிற்கே அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறப்படுகின்றது. இதனால்  பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதோடு, இந்த கோடை வெயிலில் பேருந்துகளுக்காக அலையும் சிரமத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

    சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் பணியாற்றும் தமிழக போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்படுவது வழக்கம். அதன்படி 12-வது ஊதிய ஒப்பந்தத்தின் பயன்பாடு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்து விட்டது. எனவே 13-வது ஊதிய ஒப்பந்தத்திற்கான முத்தரப்பு பேச்சு வார்த்தை கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. பல கட்டங்களாக நடந்த பேச்சு வார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்பதால் வேலை நிறுத்தத்திற்கு சில சங்கங்கள் அழைப்பு விடுத்தன.

    தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கைகளாக விளங்குவது, ஊதிய உயர்வு, பணி ஓய்வின்போதே ஓய்வூதியம் முழுவதையும் ஒரே தவணையில் வழங்க வேண்டும் என்பது, ஏற்கனவே நிலுவையில் உள்ள ஓய்வூதியத்தையும் வழங்க வேண்டும் என்பது உட்பட ஏழு கோரிக்கைகளை வலியுறுத்தி பத்து தொழிற்சங்கங்களின் சார்பில் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகின்றது.

    ஒவ்வொரு மாதமும், தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட 1652 கோடி ரூபாய் வைப்பு நிதியை, வேறு திட்டங்களுக்காக அரசு செலவு செய்தது ஏன் என்பதை விளக்க வேண்டும். மேலும், 18,300 கோடி ரூபாய் அளவிற்கு போக்குவரத்துக் கழகத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது. இந்த நட்டம் என்பது போதிய அளவிற்கு கட்டணம் உயர்த்தப்படாததால் என அரசு தரப்பில் கூறப்பட்டாலும், போக்குவரத்து துறையில் மண்டிக்கிடக்கும் ஊழலும், நிர்வாக சீர்கேடுமே இதற்கு முதன்மையான காரணம் என்பதை மறுக்க முடியாது.

    இந்த பிரச்சனை நேற்று தொடங்கி, இன்று முளைத்ததல்ல. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆட்சி செய்த போது, ஊழலிலும்  - நிர்வாக சீர்கேட்டிலும் யார் யாரை விஞ்சுவது எனும் போட்டியால் வந்த வினைதான் இது. எனவே 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இப்பிரச்சனையை ஒரே ஆண்டில் தீர்த்து விட முடியுமா? அது நடைமுறைக்கு சாத்தியமா? என்பதையும் தொழிற்சங்கங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    எந்தத் துறையைக் காட்டிலும், தமிழக போக்குவரத்துத் துறையில் தான் அரசியல் கட்சிகளின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கின்றது என்பதை அனைவரும் அறிவர். நேரடியாகவே ஆளும் கட்சிக்கு வேண்டிய சங்கங்கள் எனவும் எதிர்கட்சிக்கு வேண்டிய சங்கங்கள் - எனவும் செயல்படும் நிலை மிகுந்த வருத்தத்திற்குரியதாகும். தொழிற் சங்கங்கள் என்பது தொழிலாளர்களின் தேவைகளையும் – உரிமைகளையும் முன்னிலைப் படுத்துவதாக இருக்க வேண்டுமே ஒழிய, சில அரசியல் கட்சிகளின் செயல்திட்டங்களை அரங்கேற்றும் களமாக அமைந்து விடக்கூடாது என்பதில் தொழிலாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    எனினும், தற்போதைய சூழ்நிலையில் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் தொடராதிருக்க, தமிழக அரசும் - தொழிற்சங்க பிரதிநிதிகளும் – போக்குவரத்துக் கழக அதிகாரிகளும் கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை உடனடியாக நடத்தப்பட வேண்டும். அரசு மற்றும் தொழிற் சங்கங்கள் இரு தரப்பு நியாயங்களை உணர்ந்து கொண்டு, மக்கள் நலன் கருதி சுமூக உடன்பாட்டிற்கு வர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.