-
மக்களின் மனநிலையை உணர்ந்து பூரண மதுவிலக்கை அமுல்படுத்தவேண்டும் - தமிழக அரசுக்கு டாக்டர் பாரிவேந்தர் வலியுறுத்தல்
எந்த ஒரு அரசு திட்டமும் – சட்டமும் மக்களின் தேவைகளை நிறைவேற்றவும், அவர்களின் சமூக ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவரவுமே ஏற்படுத்த வேண்டும். ஆனால், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள மதுக்கொள்கை என்பது, மக்களின் தேவைக்காகவும் இல்லாமல், அவர்களின் சமூக ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வரவும் இல்லாமல், பொது அமைதியை கெடுப்பதாகவும், மக்களின் உடல் – மன ஆரோக்கியத்தை சிதைப்பதாகவுமே உள்ளது.
இதனால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, பொதுநல அமைப்புகள் – மகளிர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் என அனைத்து தரப்பினரிடமிருந்தும் கோரிக்கைகள் வந்து கொண்டேயிருந்தன. ஆனால் தமிழக அரசு இவை எதையும் கண்டுகொள்ளாமல், மதுவிற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் மீதே குறியாய் இருக்கின்றது.
தற்போது, நீதிமன்றமே இப்பிரச்சனையை கையில் எடுத்துக்கொண்டு தமிழக அரசுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அவர்கள், மத்திய அரசின் கேபினட் செயலாளர், சட்டம் மற்றும் சமூக நலத்துறை செயலாளர், தமிழக உள்துறை செயலாளர், தமிழக வருவாய் துறை செயலாளர், காவல்துறை இயக்குனர், டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் ஆகியோரை மனுதாரர்களாக சேர்த்து, தாமாகவே வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகின்றார். இது தமிழக அரசின் மதுவிலக்கு கொள்கை மீதான அடியாகும்.
நீதிமன்றத்தின் சட்ட ரீதியான தாக்குதல் ஒருபுறமும், இன்னொருபுறம் பொதுமக்களும் - மகளிரும் வெகுண்டெழுந்து டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 500 மதுக்கடைகளை அகற்றுவதாக வாக்குறுதியளித்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள், 500 மதுக்கடைகளை அப்புறப்படுத்துவதாக அறிவித்தார். ஆனால் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி, 500 மீட்டருக்குள்ளாக இருக்கும் அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் என நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, தற்போதைய அதிமுக அரசு ஏற்று நடத்தவில்லை. அது மாத்திரமல்லாமல், குறுக்கு வழியில் மதுக்கடைகளை நிறுவவும் பல்வேறு ஏமாற்று வழிகளை அரசு கடைபிடிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
இன்றும் குஜராத்தில் மதுவிலக்கு நடைமுறையில் உள்ளது. 2016 முதல் பீகார் மாநிலத்திலும் மதுவிலக்கு அமலில் உள்ளது. கேரளாவில் படிப்படியாக அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டு வருகின்றன. மதுவின் தீமைகள் குறித்து பல்வேறு கட்டங்களில் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் தமிழக அரசு எதனையும் கருத்தில் கொள்ளவில்லை.
இந்தியாவில் 96 நிமிடங்களுக்கு ஒருவர் வீதம் மதுவால் இறக்கின்றனர் என குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 70 லட்சம் தினக்கூலி தொழிலாளர்கள் மது அருந்துகின்றனர் என கூறப்படுகிறது. இதனால் அவர்களின் உடல் நலன் பாதிக்கப்படுவதோடு, குடும்ப வருவாயும் வீணான முறையில் செலவழிக்கப்படுகிறது. மேலும், பெண்கள் – குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் பெருக, மது தான் பிரதான காரணம் என்பதை புறந்தள்ளி விட முடியாது.
தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 1570 கோப்புகளில் விரைந்து கையெழுத்திட்டுள்ளதாக பெருமைப்பட பேசி இருக்கின்றார். “தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்” என்கிற ஒரே ஒரு கோப்பில் கையெழுத்திட்டிருந்தால் மட்டும் போதும், ஒட்டு மொத்த தமிழ்நாடே பாராட்டியிருக்கும்.
அரசின் இந்த தொடர் அலட்சியத்தைக் கண்டித்து, வீட்டில் இருக்கும் பெண்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். பள்ளி – கல்லூரிகளில் பயிலும் மாணவர்களும் - பொது மக்களும் ஒன்றிணைந்து ஆவேசக் குரல் எழுப்புகிறார்கள். இதுதான் காலத்தின் அறிகுறி என்பதை ஆள்வோர் உணர்ந்து, மக்கள் மனநிலையை அறிந்து பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்.