-
உழைப்பாளிகளின் கரங்களில் ஏற்படும் வடுக்கள்தான் தேசத்தை அறிமுகப்படுத்தும் அடையாளங்கள் - IJK தலைவர் ரவிபச்சமுத்து மே தின வாழ்த்து
உடலை இயந்திரமாக்கி, வியர்வை துளிகளால் உலக வரைபடத்தை வார்த்தெடுக்கும் உழைப்பாளிகளின் உரிமைகள் வெற்றிபெற்ற திருநாள்தான் “மே” தினமாகவும், தொழிலாளர் தினமாகவும் உலகெங்கும் கொண்டாடப்பட்டுவருகின்றது.
காலவரையற்ற உழைப்பு – கொத்தடிமைத்தனமான இன்னல்கள் ஆகியவற்றிலிருந்து, தொழிலாளர்கள் தங்களை விடுவித்துக்கொள்ள 1806-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஃபிலடெல்பியா-வில் ஒன்று திரண்டு சீறி எழுந்தனர்.
முதலாளித்துவத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டிய அனைத்து நாடுகளிலும் இப்போராட்டம் வெடித்தது. பல ஆண்டுகளாக தொடர்ந்து போராடிய உழைக்கும் வர்க்கத்தினரின் கோரிக்கையை ஏற்று, 1886-ம் ஆண்டு மே-1 ஆம் தேதி முதல், தொழிலாளர்கள் அனைவருக்கும் நாளொன்றுக்கு 8.00 மணி நேர வேலையும் – பணி சுமைக்கு ஏற்ப ஊதியமும் வழங்க அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கூட்டமாக தீர்மானித்தது.
ஆகவே பாரெங்கும் பரந்துவாழும் தொழிலாளர்கள் பலவிதத்தில் அனுபவித்த கொடுமைகளுக்கு, உறுதியுடன் ஒற்றுமையாக போராடினால் எதிலும் வெற்றியடைய முடியும் என நிரூபித்துக்காட்டிய நன்னாள் இது.
உழைப்பு உலகத்தை உயர்த்தியது. ஆனால் உழைத்தவனை உயர்த்தியதா..? என்ற கேள்விக்கு உழைப்பாளிகளின் கரங்களில் ஏற்படும் வடுக்கள்தான் தேசத்தை அறிமுகப்படுத்தும் அடையாளங்கள் என உலகெங்கும் வாழும் முதலாளிகள் வர்க்கத்தினரை உணர வைத்த இந்த உன்னதமான நாளில், உழைக்கும் வர்க்கத்தினர் தாழ்ந்து கிடந்து போராடக்கூடிய அவல நிலையை மாற்றி, உழைப்பவர்கள்தான் உலகைப்படைக்கும் பிரம்மாக்கள் என்று உணர்ந்து, ஒவ்வொரு நாளும் அவர்களின் உணர்வுகளை நாம் மதிக்கவேண்டும் எனக்கூறி, உலகெங்கும் வாழும் அனைத்து தரப்பட்ட உழைப்பாளிகள் அனைவருக்கும் இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் எனது உளம் கனிந்த தொழிலாளர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.