-
IJK – வின் 8-ஆம் ஆண்டு துவக்கவிழா கட்சியின் தலைமை அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது
இந்திய ஜனநாயக கட்சியின் 8-ம் ஆண்டு துவக்கவிழா மற்றும் மூத்த வழக்கறிஞரும் கட்சியின் பொருளாளருமான திரு.G.ராஜன் அவர்களின் 83-வது பிறந்தநாளும் வெகுசிறப்பாக இன்று (28.04.2017) அசோக்நகரிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. கட்சியின் நிறுவனத்தலைவர் மாண்பமை டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் கட்சியின் கொடியேற்றி வைத்தும், நீர்மோர் பந்தலை திறந்துவைத்தும், பிறந்த நாள் கேக் வெட்டியும் சிறப்புரை ஆற்றினார்.
இதில் அவர் பேசுகையில், இந்திய ஜனநாயக கட்சி தொடங்கியது முதல் இன்றுவரை இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல், 2 பொதுத்தேர்தல்கள், 1 பாராளுமன்ற தேர்தல் ஆகியவற்றை சந்தித்துள்ளது. ஐஜேகே நல்ல கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் கொண்ட கட்சி. கடந்த 2011-ல் விவசாயிகளின் நலன் கருதி, விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டை பெரம்பலூரில் நடத்திக்காட்டினோம். அதில் ஏறக்குறைய 2 லட்சம் விவசாயிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஆகவே நான் ஒரு விவசாயியாக இருப்பதால், விவாசயிகளின் பிரச்சனைகளை நன்கு உணர்ந்து நம் கட்சியின் சார்பில் தொடர்ந்து விவசாயிகளுக்கு முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் கொடுத்துவருகின்றோம்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தலைவர் திரு.அய்யாக்கண்ணு அவர்கள் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர்மந்தரில் தொடர்போராட்டத்தில் ஈடுபட்ட விவிசாயிகளை சந்தித்து ஐஜேகே-வின் சார்பில் ஆதரவினை தெரிவித்தேன். அப்போது அய்யாக்கண்ணு அவர்கள், நீங்கள் பிரதமர் மோடி அவர்களின் நல்ல நண்பர். பிஜேபி-யின் தோழமைக்கட்சிகளில் ஒன்றாக இருப்பதால்,இப்போராட்டத்தை மாண்புமிகு பாரதப்பிரதமரின் கவனத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும். மேலும், விவசாயிகள் கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கடன்களை முழுமையாக ரத்து செய்யும்படி பாரதப்பிரதமரிடம் வலியுறுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
அதன்பிறகு 10.04.2017 திங்கள் அன்று பாஜக தோழமைக்கட்சிகளின் கூட்டம் (NDA) டெல்லியில் நடைபெற்றது. அக்கூட்டத்தை பாஜக தேசியத்தலைவர் திரு.அமித்ஷா அவர்கள் கூட்டியிருந்தார். இதில் இந்தியாவிலுள்ள பாஜக-வின் தோழமைக்கட்சிகளின் தலைவர்கள் 33 நபர்களையும் அழைத்திருந்தார்கள். அதில் ஐஜேகே-வின் நிறுவனத்தலைவர் என்கிற முறையிலும், பிஜேபி-யின் தோழமைக்கட்சி என்கிற முறையிலும் நானும் கலந்துகொண்டேன்.
அக்கூட்டத்தில் பாரதப்பிரதமர் மாண்புமிகு நரேந்திரமோடி அவர்களும்,உள்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் அவர்களும், நிதி அமைச்சர் திரு.அருண்ஜேட்லி அவர்களும், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு.வெங்கையா நாயுடு அவர்களும், மின்துறை அமைச்சர் திரு.பியூஸ் கோயல் அவர்களும் மற்றும் தெலுங்கு தேச கட்சியின் தலைவரும் ஆந்திர முதலமைச்சருமான திரு.சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல தலைவர்களும் கலந்துகொண்டனர்.
ஒவ்வொரு தோழமைக்கட்சிக்கும் பேசுவதற்கு 5 நிமிட வாய்ப்பு தரப்பட்டது. அக்கூட்டத்தில் நான் பேசுகையில், தமிழ்நாடு 140 ஆண்டுகள் காணாத கடும் வறட்சியை சந்தித்துள்ளது - தாய்மார்கள் பல கிலோ மீட்டர்கள் நடந்து குடிநீர் கொண்டு வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது – விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கருதாமல், வங்கிகள் சற்றும் இரக்கமின்றி விவசாயிகள் பெற்ற கடனை திருப்பிச்செலுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஆகையால் மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்கள் இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு விவசாயிகள் கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் பெற்ற கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய உதவ வேண்டுமென கேட்டுக்கொள்வதுடன், பருவகால மாற்றத்தால் ஏற்படும் வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கைப் போக்க நதிகளை இணைக்கவேண்டும் எனவும், சுதந்திரம் அடைந்து ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்குப்பிறகும், தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் ரயில்பாதையைப் பார்க்கும் வாய்ப்பே இல்லை. இதன் காரணமாக மக்கள் வணிக ரீதியாகயும், போக்குவரத்து ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என நேரடியாகவே வலியுறுத்திக் கேட்டுக்கொண்டேன்.
பிஜேபி-யின் மூத்த தோழமைக்கட்சி ஐஜேகே என்பதால், நான் பேசியதை மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்கள் கூர்ந்து கவனித்தார்கள். அதுமட்டுமல்லாது கூட்டம் முடிந்த பிறகும், நான் பாரதப்பிரதமரை அந்த அரங்கில் தனியாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதும் மீண்டும் தமிழக விவசாயிகளின் பிரச்சனைகளை தனிப்பட்ட முறையில் எடுத்துச்சொன்னேன்.
விவசாயிகளின் பிரச்சனைகளையும், கடன் தள்ளுபடி பற்றியும் பாரதப்பிரதமரிடம் நேரடியாகப் பேசிய ஒரேகட்சி இந்திய ஜனநாயக கட்சி தான். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத போராட்டங்களை எப்போதும் ஐஜேகே நடத்துவதுடன், கட்சி – நாடு – ஒற்றுமை இதுதான் எங்களின் பிரதான கொள்கை.
நாம் ஒற்றுமையுடன் இருந்து இந்தக் கட்சியை வளர்க்கவேண்டும். உங்களின் எழுச்சியைப் பார்க்கின்றபோது வருங்காலத்தில் ஐஜேகே தமிழகத்தை ஆளும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை என் மனதில் எழுந்துள்ளது. இது ஒரு முன்மாதிரியான கட்சி. மற்ற கட்சிகளை விட ஐஜேகே-தான் பொதுமக்களுக்கு விளம்பரமில்லாமல் அதிகளவில் உதவி செய்துகொண்டு வருகின்றது.
ஒரு கட்சி எப்படி இயங்கவேண்டுமோ அதுபோல் சத்தமில்லாமல் ஐஜேகே இயங்கிவருவதுடன், பொதுமக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க வேண்டிய நேரத்தில் நிச்சயமாக ஐஜேகே குரல் எழுப்பும். நல்லவர்கள் எப்போதும் அமைதியாகத்தான் இருப்பார்கள் என்பதை மற்றவர்கள் உணரவேண்டும் என்று கூறி இந்த வரலாற்றுச்சிறப்பு மிக்க ஐஜேகே-வின் 8-ம் ஆண்டு துவக்கவிழாவிற்கு வருகை தந்துள்ள மாநில நிர்வாகிகள் – மாவட்ட நிர்வாகிகள் – மகளிரணியைச் சேர்ந்தவர்கள் – இளைஞரணியைச் சேர்ந்தவர்கள் – தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இக்கூட்டத்தில் மூத்த வழக்கறிஞர் மற்றும் பொருளாளர் திரு.G.ராஜன், ஐஜேகே-வின் ஆலோசனைக்குழு உறுப்பினர் திரு.N..வேலாயுதம், பாமுச துணை தலைவர் திரு.S.ஜெயராமன், பொதுச்செயலாளர் திரு.P.ஜெயசீலன், இணை பொதுச்செயலாளர் திரு.R.கிருஷ்ணமூர்த்தி, முதன்மை அமைப்புச் செயலாளர் திரு.S.S.வெங்கடேசன், விளம்பர பிரிவு செயலாளர் திரு.S.முத்தமிழ்செல்வன், தொழிற்சங்க தலைவர் திரு.தேவதாஸ், செயலாளர் திரு.சேவியர், இளைஞரணி துணை செயலாளர் கோகுல்ராஜ், சென்னை புறநகர் மாவட்ட தலைவர் திரு.ஹென்றி ஜேம்ஸ், காஞ்சி வடக்கு மாவட்ட தலைவர் திரு.ராஜா, மத்திய சென்னை மாவட்ட தலைவர் திரு.லெனின், சென்னை மேற்கு மாவட்ட தலைவர் திரு.முகம்மது ஹனிபா, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் திரு.முத்து, திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் திரு.சேகர் உள்ளிட்ட கட்சியின் சென்னை - காஞ்சிபுரம் – திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாநில - மாவட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாக கலந்துகொண்டனர்.