• பொதுமக்களின் நலன்கருதி அரசு ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் - தமிழக அரசிற்கு IJK தலைவர் ரவிபச்சமுத்து கோரிக்கை

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் – 20% இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் – தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் – காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தில் உள்ள 64 துறைகளைச் சேர்ந்த 2.5 லட்சம் அரசு ஊழியர்கள் நேற்று (25.04.2014) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

    ஏற்கனவே தமிழகத்தில் பல்வேறு அரசியல் அசாதாரண சூழ்நிலைகள் ஏற்பட்டு, அனைத்து துறைகளிலும் உள்ள கோப்புகள் தேங்கி மக்களின் பிரச்சனைகளையும் - கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியாத சூழலில், தற்போது அரசு ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் பொதுமக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

    கடந்த 2015 டிசம்பர் மாதத்தில் கடும் மழை ஏற்படுத்திய வெள்ளச்சேதம் - 2016 டிசம்பர் மாதத்தில் வர்தா புயல் ஏற்படுத்திய கடுமையான சேதம் மற்றும் உயிரிழப்பு - தற்போது 140 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்டுள்ள வரலாறு காணாத கடுமையான வறட்சியால் ஏற்பட்டுள்ள இழப்பு ஆகியவற்றையெல்லாம் முழுமையாக கணக்கெடுத்து இழப்பீடு வழங்க முடியாத அவல நிலையிலும், தற்போது தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க, தொடர்ந்து குடிநீர் வசதி செய்துகொடுக்க முடியாத சூழலும் தமிழக அரசிற்கு ஏற்பட்டுள்ளது.

    இவற்றைப்பற்றியெல்லாம் அரசு ஊழியர்கள் சிறிதும் கவலைப்படாமலும் – கருத்திற்கொள்ளாமலும், பொதுமக்களின் துன்பங்களைப்பற்றி சிந்திக்காமலும், திடீரென அரசு ஊழியர்கள் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்திருப்பது என்பது மிகுந்த கண்டனத்திற்கு உரியதாகும்.

    ஏற்கனவே விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற முடியாததால், தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் தலைநகரத்திலும் விவசாயிகளின் போராட்டம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய சூழ்நிலையில், தற்போது தமிழகத்தில் மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளை கருத்திற்கொண்டும், அதே வேளையில் அரசு ஊழியர்களின் போராட்டத்தில் உள்ள நியாயங்களை கவனத்திற்கொண்டும், போராட்டத்தை தொடரவிடாமல், உடனடியாக பொதுமக்களின் நலன்கருதி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 64 துறைகளை சார்ந்த சங்கங்களிடம் பேசி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசினை இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்ளப்படுகிறது.