-
“இயற்கையின் கடும் வறட்சியை எதிர்கொள்ளும் மனத்துணிவை பெறுவோம்” - ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து தமிழ் புத்தாண்டு வாழ்த்து
உலகின் தொன்மையான பண்பாட்டிற்கு சொந்தக்காரர்களாக விளங்கியவர்கள் தமிழர்கள். காலசுழற்சியை நான்காக பிரித்து, இளவேனிற்காலம், கோடைக்காலம், இலையுதிர்க்காலம், குளிர்காலம் என் பெயரிட்டனர். மேலும், குறிஞ்சி – முல்லை- மருதம்- நெய்தல்- பாலை என நிலத்தினை ஐந்தினையாக்கி ஆண்டு வந்தவர்கள் தமிழர்கள். ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடி’ என தமிழர்களின் ஆதி தோற்றத்தினை புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகின்றது.
இதேபோல் செய்யும் தொழிலைக் கொண்டும் மக்கள் நான்கு வகையினராக பிரிக்கப்பட்டிருந்தனர் என்பதனை தொல்காப்பியம் எடுத்துரைக்கின்றது. அந்தனர் - அரசர் - வணிகர் - வேளாளர் - ஆகிய நான்கு இனங்களுக்குரிய உரிமைகள் மற்றும் தொழில்கள் பற்றிய வரையறைகளும் கூறப்பட்டுள்ளன. எனினும், அவைகள் தற்போது நாம் பார்க்கும் சாதிகளின் அடிப்படையில் அல்லாமல் தொழில்களின் அடிப்படையிலேயே இனம் பிரிக்கப்பட்டிருந்தன.
இந்த அளவிற்கு கலை, பண்பாடு, அரசு நிர்வாகம், உலக அளவிலான வணிகம், வான சாத்திரம், கட்டுமான நுண்ணறிவு என அனைத்து துறைகளிலும் முன்னோடியாக விளங்கிய தமிழர்களின் கால கணக்கின் படி, ஸ்ரீதுன்முகி ஆண்டு முடிவுற்று - ஸ்ரீஹேவிளம்பி ஆண்டு நாளை பிறக்கின்றது.
கடந்த ஆண்டில் தமிழகத்தின் பெரும் அரசியல் தலைவர் மரணம், கடுமையான காற்றுடன் கூடிய மழையினால் ஏற்பட்ட சேதம் என பல்வேறு தின்பங்களை மக்கள் சந்தித்தனர். இந்த ஆண்டும் வரலாறு கண்டறியாத வறட்சியின் பிடியில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே சிக்கித்தவிக்கின்றது. சராசரி அளவில் 32 சதவீதம் மட்டுமே பெய்தபருவ மழையினால், தமிழக விவசாயிகள் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
விதைத்த நெல்லிற்கான ஈடு இன்றியும், சாகுபடி செலவிற்காக பட்ட கடன் சுமையினாலும் தமிழக விவசாயிகள் சொல்லொணா துன்பத்தில் தத்தளிக்கின்றனர். மத்திய – மாநில அரசுகள் வழங்கிய நிவாரண உதவி, அவர்களின் வாட்டத்தை போக்கவும் – துன்பத்தை துடைக்கவும் போதுமானதாக இல்லை. அனைத்திற்கும் மேலாக, குடிநீர் இன்றி மக்கள் படும் சிரமத்திற்கு அளவே இல்லை.
இந்நிலையில், இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள இயற்கையின் கடும் வறட்சியை எதிர்கொள்ளும் மனத்துணிவை பெறவும், வாய்ப்பும் – வசதியும் உள்ளவர்கள் சக மனிதர்களுக்கு உதவும் மனித நேயத்தை வளர்க்கவும் நாம் அனைவரும் முன்வர வேண்டும் எனக்கூறி, தமிழ்கூறும் நல்லுலகில் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.