-
மத்திய அமைச்சர் திரு. பொன்.ராதாகிருஷ்ணன் மீது காலணி வீசிய செயல் மிகவும் கோழைத்தனமானது - IJK நிறுவனர் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் கண்டனம்
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேல்படிப்பு படித்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணனின் தற்கொலை நாம் அனைவரும் வருத்தப்படக்கூடிய ஒன்றாகும். அதனை அறிந்த மத்திய அமைச்சர் திரு. பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில்சென்று மாணவர் முத்துகிருஷ்ணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, எய்ம்ஸ் மருத்துவமனையில் அவரின் பிரேத பரிசோதனை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் முறையாக நடைபெற உறுதுணையாக இருந்துள்ளார்.
டெல்லி காவல்துறையினரிடம் பேசி, தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கை பதிவு செய்து, மாணவரின் தற்கொலைக்கு காரணமாக இருந்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், முத்துகிருஷ்ணனின் உடல் டெல்லியில் இருந்து அவரின் சொந்த ஊரான சேலத்திற்கு கொண்டு வரவும் ஏற்பாடுகளை செய்ததோடு, அவரின் தந்தை திரு. ஜீவானந்தம் அவர்களுடன் சேலத்திற்கு வந்துள்ளார்.
இறுதி சடங்கு நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிக்கொண்டிருக்கையில், மத்திய அமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணன் அவர்களை நோக்கி ஒருவர் காலணியை வீசி இருக்கிறார். காலணி வீசிய நபரை காவல்துறையினர் பிடித்துவழக்கு பதிவுசெய்ய கொண்டு சென்ற போது கூட, அதனை மறுத்து – அவரை மன்னித்து விட்டுவிடும்படி கூறியுள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு உரிமைப் பிரச்சனைகளை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று அவைகள் வெற்றிபெற காரணமாக இருந்தவர் திரு. பொன். ராதாகிருஷணன் அவர்கள். கேரள, கர்நாடக அரசுகள் அணைகள் கட்டும் பிரச்சனை, மீதேன் எரிவாயு பிரச்சனை, ஜல்லிக்கட்டிற்கான அனுமதியை பெற சட்ட ரீதியான நடவடிக்கைகள், ஹைட்ரோ-கார்பன் திட்டத்தை நிறுத்த மேற்கொண்ட முயற்சி என பல்வேறு நிகழ்வுகளில் ஈடுபட்டு, போராட்டம் நடத்துபவர்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தி நடத்தி, அவர்கள் தரப்பு நியாயங்கள் வெற்றிபெற பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். கட்சி – கொள்கைகள் என கருத்துமாறுபாடுகள் இருந்தாலும் அனைத்து தரப்பினருடனும் நாகரீகமான நட்பையும் – தோழமையையும் பேணிக்காப்பவராக திரு. பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள் உள்ளார்.
இந்த அளவிற்கு நேர்மையுடன் பொதுவாழ்வில் செயலாற்றிவரும் திரு.பொன்னார் அவர்களின் மீது காலணியை வீசிய செயல் மிகுந்த கண்டனத்திற்குரியது மட்டும் அல்ல, கருத்தை கருத்துடன் மோத முடியாதவர்களின் கோழைத்தனம் என்றும் கூறலாம். மாணவர் முத்துகிருஷ்ணன் அவர்களின் தற்கொலையில் சந்தேகம் இருந்தாலோ அல்லது அவரின் மரணத்திற்கு வேறு ஏதாவது காரணம் இருந்தாலோ அதுபற்றி முறையான விசாரணைக்கு கோரலாம். தேவையெனில் ஜனநாயக ரீதியில் போராடலாம். அதனை விடுத்து காலணி வீசுவது என்பது காட்டுமிராண்டித்தனமான செயலாகும்.
இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெறாதிருக்க, அனைத்து கட்சிகளையும், இயக்கங்களையும் சார்ந்த தலைவர்களும் – அதன் தொண்டர்களும் சகிப்புத்தன்மையையும், மக்கள் சக்தியுடன் ஒன்றிணைந்து ஜனநாயக ரீதியில் போராடும் நெறிமுறையினையும் கைக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.