-
தமிழக அரசின் கடன் சுமையை குறைக்க நிதிமேலாண்மையின் சீர்திருத்தம் தேவை - நிதிநிலை அறிக்கை குறித்து IJK தலைவர் ரவிபச்சமுத்து கருத்து
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மறைந்ததையடுத்து, பதவி ஏற்ற புதிய அரசு தாக்கல் செய்யும் முதல் நிதிநிலை அறிக்கை என்கிற முறையிலும், 2011 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, அதன் தொடர்ச்சியாக 2016 சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்ற அரசின் நீட்சி என்கிற வகையிலும்,தமிழக மீன்வளத்துறை அமைச்சர் திரு.ஜெயக்குமார் அவர்கள், நிதித்துறையின் பொறுப்பினையும் ஏற்று தாக்கல் செய்கிற முதல் நிதிநிலை அறிக்கை என்கிற வகையிலும், இந்த 2016-17-ம் ஆண்டிற்கான பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அவ்வகையில், இந்த நிதிநிலை அறிக்கை குறித்த எதிர்பார்ப்புகள் தமிழக மக்களிடம் பெருமளவில் ஏற்பட்டிருப்பது இயல்பானதே. ஆனால் மக்களின் இந்த எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பது கேள்விக்குறியே.
கடந்த 2015 – 16 நிதிநிலை அறிக்கையில், தமிழகத்தின் உணவு உற்பத்தி இலக்கு 1 கோடியே 40 லட்சம் மெட்ரிக் டன் என குறிப்பிடப்பட்டிருந்து. ஆனால், இந்த நிதிநிலை அறிக்கையில் 1 லட்சம் கோடி மெட்ரிக் டன்தான் உணவு உற்பத்தி இலக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் உற்பத்தி இலக்கு கூடிக்கொண்டு போவதுதான், விவசாயத்துறையில் தமிழகம் தொடர்ந்து முன்னேறிச்செல்கிறது என்பதான பொருள். சுமாராக 3-ல் 1 பங்கு அளவிற்கு உணவு உற்பத்தி இலக்கு குறைக்கப்பட்டுள்ளது பெரும் கவலையளிக்கும் செயலாகும். அதே வேளையில் பொது வினியோக திட்டத்திற்கான உணவு மானியம் 5,500 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரிசி உற்பத்தி குறைந்து, கொள்முதல் கூடும் வேளையில் இந்த மானியம் போதுமானதாக இருக்காது என கருதுகின்றோம்.
தமிழகத்தின் கடன்சுமை என்பது ஆண்டுதோறும் கூடிக்கொண்டே போவதை தமிழக மக்கள் கவலையுடன் பார்க்கின்றனர். 2014-15-ம் ஆண்டில் தமிழகத்தின் கடன் 1.78 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு 2017-18–ம் ஆண்டில் 3.14 லட்சம் கோடியாக உயரும் என கூறப்பட்டுள்ளது. இதனுடன் பொதுத்துறை நிறுவனங்களுக்கான கடன் சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாயையும் சேர்த்தால், தமிழகத்தின் கடன் அளவு ஐந்து லட்சம் கோடியையும் தாண்டும் என்பது அதிர்ச்சிக்குரியதாகும். இந்த கடன் அளவுகளை படிப்படியாக குறைக்க அரசின் வருவாய் இனங்களில் எந்த முன்னேற்றமும் கூறப்படவில்லை. எனவே, தமிழக அரசு கடன்சுமையை குறைக்க நிதி மேலாண்மையில் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும்.
திருப்பூர், ஈரோடு, மாவட்ட மக்களின் நீண்டகால போராட்டத்தினை அடுத்து அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு ரூபாய் 250 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதையும், கோடையில் குடிநீர் பிரச்சனையை சமாளிக்க 615 கோடி ரூபாயும், புதிய பயிர்க்கடன் வழங்க ஏழாயிரம் கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதையும், நடப்பாண்டில் ஏற்பட உள்ள கடும் வறட்சியினை கருத்தில்கொண்டு, கிராமப்புற விவசாய கூலித்தொழிலாளர்களின் வாழ்க்கை ஆதாரத்திற்காக நூறு நாள் வேலைத்திட்டத்தை, 150 நாட்களாக உயர்த்தி அறிவித்துள்ளதையும், இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் வரவேற்கின்றேன்.