-
பெண்களின் சமஉரிமைகள் பாதுகாக்கப்பட அரசியல் சட்டத்தில் திருத்தம் தேவை சர்வதேச மகளிர் தினம் - ரவிபச்சமுத்து வாழ்த்து
‘மாதராய் பிறப்தற்கோர் மாதவம் செய்திட வேண்டும்’ எனும் கவிமணி தேசிய விநாயகம் அவர்களின் எண்ணக் கிடக்கை இன்றுள்ள சூழ்நிலையில் பொருந்தி வருகிறாத என்பதை மறு ஆய்வு செய்யக்கூடிய காலம் இது. பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பெண்களின் அபரிமிதமான முன்னேற்றத்தினை குறிக்கும் வளர்ச்சியாகும்.
நூறு ஆண்டுகளுக்கு முன்னால், அறிவியல் தொழில் நுட்பம் வளர்ந்திடாத காலத்தில், அடுக்களை முதல் பொதுவெளி வரை பெண்கள் பட்ட துயரங்கள் சொல்லிமாளாது. இன்று நவீன சாதனங்கள் மூலம் அவர்களின் வாழ்க்கை முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதே அறிவியல் வளர்ச்சியின் ஒரு கிளையான சமூக ஊடங்கள் மூலம் இளம் பெண்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுகின்றனர். இதில் இருந்து பெண்களை பாதுகாக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உண்டு.
அரசு பதவிகளிலும், அரசு வேலைவாய்ப்புகளிலும் பெண்களுக்கான சம உரிமைகள், சம வாய்ப்புகள் நிர்ணயிக்கப்பட வேண்டும். அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுங்கீடு என்பதே எங்கள் கட்சியின் கொள்கையாகும். அதன் அடிப்படையில், தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள 50 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான அறிவிப்பினை எங்கள் கட்சி ஏற்கனவே வரவேற்றுள்ளது. இதே போல் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் இடங்களிலும், கல்வி வேலை வாய்ப்பிலும் பெண்களின் சம உரிமைகள் பாதுகாக்கப்பட அரசியல் சட்டத்திலேயே திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் எனக் கூறி, இந்திய ஜனநாயகக் கட்சியின் மகளிர் அணி உள்ளிட்ட அனைத்து மகளிருக்கும், சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.