• தமிழக மீனவரை சுட்டு வீழ்த்தியதன் மூலம் இலங்கை இந்தியாவின் நட்பு நாடல்ல என்பதை உணர வேண்டும் - மத்திய அரசுக்கு IJK தலைவர் ரவிபச்சமுத்து வலியுறுத்தல்

    நேற்று (6.3.2017) திங்கட்கிழமை இரவு ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் விசைப்படகுகள் மூலம் ஆதம்பாலம் கடற்பகுதியில் வழக்கம்போல் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.  அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு வந்த இலங்கை கடற்படையினர் திடீரென இந்திய விசைப்படகு மீது வெடிகுண்டு வீசியும், துப்பாக்கியால் சுட்டும் வெறியாட்டம் நடத்தியுள்ளனர்.

    இதில், தங்கச்சிமடத்தை சேர்ந்த டிட்டோ எனும் 21 வயதான இளைஞர் பரிதாபமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதே படகில் இருந்த சில மீனவர்களும் படுகாயம் அடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடைபெற்ற உடனேயே, விசைப்படகில் இருந்த தமிழக மீனவர்கள், ராமேஸ்வரத்தில் உள்ள மீனவர் சங்கத் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு நிலைமையின் விபரீதத்தை கூறியுள்ளனர். அவர்களும் மாவட்ட ஆட்சித் தலைவருடன் தொடர்பு கொண்டு, இந்திய கடற்படை மூலம் இந்த வெடிகுண்டு வீச்சை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறியும், அத்தகவல் பரிமாறிக்கொள்வதற்குள் தமிழக மீனவர் டிட்டோ துப்பாக்கியால் சுடப்பட்டு பலியாகியுள்ளார்.

    கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற இந்திய – இலங்கை மீனவர்கள் சங்கம் மற்றும் இந்திய இலங்கை அரசின் பிரதிநிதிகள் உடனான பேச்சு வார்த்தையில், ‘எக்காரணம் கொண்டும் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட எந்த தாக்குதலும் நடத்தப்படாது’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை எள்முனையளவும் மதிப்பதில்லை என, இலங்கை அரசு தமக்குள்ளாகவே எடுத்துக்கொண்ட முடிவு இதன் மூலம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

    ஏற்கனவே தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்து இலங்கை அரசு அபகரித்து சென்றபோதும், இலங்கை இந்தியாவின் நட்பு நாடு எனக்கூறி இந்திய அரசு சமாதானப்படுத்தி வந்தது. இந்த துப்பாக்கிச்சூட்டின் மூலம் இலங்கை இந்தியாவின் நட்பு நாடல்ல என்பதை மத்திய அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.

    மறைந்த இந்திராகாந்தி அவர்கள் பிரதமராக இருந்தபோது,இதைப்போலவே ஒரு துப்பாக்கிச்சூடு நடைபெற்று, அதில் தமிழக மீனவர் ஒருவர் உயிரிழந்தார். பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் இலங்கை அரசை எச்சரித்து, துப்பாக்சிச்சூடு நடத்திய இலங்கை கடற்படை வீரரை கைது செய்து இந்திய சிறையில் அடைத்து விசாரனை நடத்த உத்தரவிட்டார்.

    ஆனால், தற்போதைய சூழ்நிலையில் இலங்கை அரசின் விவகாரத்தில் இந்திய அரசு மென்மையான போக்கினை கையாள்வதால்தான் இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே, இனிமேலாவது இலங்கை இந்தியாவின் நட்பு நாடு அல்ல என்பதை உணர்ந்து மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கோள்ள வேண்டும். மேலும், சென்னையிலுள்ள இலங்கைத் தூதரிடம் நம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துவிட்டு, துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கை கடற்படையினரை கைது செய்து நம் நாட்டின் ராணுவ நீதிமன்றம் மூலம் துறை ரீதியான விசாரனை நடத்தப்பட வேண்டும் என மத்திய அரசினை கேட்டுக்கொள்கின்றேன்.