-
திருச்செந்தூர் அருகே நடைபெற்ற படகு விபத்து குறித்து முறையான விசாரனை நடத்தப்பட வேண்டும் - தமிழக அரசுக்கு ரவிபச்சமுத்து கோரிக்கை
திருச்செந்தூர் அருகே உடன்குடி பகுதியில் கடற்கரையோர கிராமமான மணப்பாடு சுற்றுலா பயணிகள் சென்று களிக்கக்கூடிய இடமாக வளர்ந்து வருகின்றது. இங்கு விடுமுறை நாட்களை கழிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் குடும்பம் – குடும்பமாக வந்து கொண்டிருக்கின்றனர். இப்பகுதி இயற்கையிலேயே அதிக உயரத்தில் அலைகள் வீசும் கடற்பகுதி என்பதால்,சர்வதேச அளவிலான அலைசறுக்கு விளையாட்டுப் போட்டிகள் இங்கு நடைபெற்றுள்ளன. எனவே இப்பகுதி கூடுதல் பாதுகாப்புடனும், கண்காணிப்புடனும் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த அழகம்மன்புரத்தைச் சேர்ந்தவர்களும், தங்கள் குலதெய்வம் கோயிலில் பூஜை முடித்துக்கொண்டு மணப்பாடு கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு சென்றதும் கடலுக்குள் தங்கள் குடும்பங்களுடன் படகில் சென்றுவர ஆசைப்பட்டு இரண்டு படகுகளை ஏற்பாடு செய்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாக ஒரு படகு பேரலையில் மோதி விபத்திற்குள்ளானதில், நிலைதடுமாறி படகு கவிழ்ந்துள்ளது. இதில் தற்போதைய தகவல்படி 9 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எங்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பொதுமக்கள் பெருமளவில் வருகின்ற இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கவேண்டும். அதிலேயும் குறிப்பாக கடலுக்குள் சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்லும்போது, சுற்றுலா வாரிய அதிகாரிகள், அல்லது தமிழ்நாடு படகு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் யாரிடமாவது ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். இந்த நடைமுறைகள் எதுவும் செய்யப்பட்டனவா என தெரியவில்லை.
அதிகாரிகளுக்குத் தெரியாமல் இந்த படகுப் பயணம் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அது கடுமையான நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட அளவினருக்கு மேல் படகில் ஆட்களை ஏற்றிச்செல்வதும்,தண்டனைக்குரிய குற்றமாகும். இதில் அதிகாரிகள் யாரும் மெத்தனமாக இருந்தனரா? அல்லது அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் படகு உரிமையாளர்களே இதுபோன்ற கடல் பயணத்திற்கு பொதுமக்களை அழைத்துச்சென்றனரா என்கிற கோணத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசினை கேட்டுக் கொள்கின்றேன்.