-
பன்றிக்காய்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். - IJK தலைவர் ரவிபச்சமுத்து வலியுறுத்தல்
கடந்த 15 நாட்களாக தமிழக மக்களை அச்சமூட்டும் வகையில் பன்றிக்காய்ச்சல் பற்றிய செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. குறிப்பாக சென்னை, திருச்சி, விழுப்புரம், கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இந்த நோயின் தாக்கம் அதிகமாக உள்ளதாக மருத்துவத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதய நிலவரப்படி திருச்சியில் 3 வயது சிறுவன் முதல் மதுரையில் ஒரு முதியவர் வரை 19 பேர் இந்நோய்க்கு பலியானதாக கூறப்படுகிறது.
ஸ்வைன்புளு எனும் வைரஸ் கிருமி மூலம் உற்பத்தியாகும் பல தொற்றுக்கிருமிகளில் எச் -1, என்-1 ஆகிய இரண்டு வைரஸ்கள் மூலமே இந்நோய் பரவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதிலும் கோழிப்பண்ணை மற்றும் பன்றிப் பண்ணைகளில் உற்பத்தியாகி, விலங்குகள் மூலம் இந்நோய் பரவுகிறது என கூறிவந்தனர். தற்போது அது உண்மை இல்லை எனவும் மறுக்கப்படுகிறது. எப்படியாயினும், தமிழகத்தில் உள்ள அனைத்து கோழிப்பண்ணைகளிலும் மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
இந்நோயை கண்டுபிடிக்க சாதாரண முறையிலான ரத்த பரிசோதனை மட்டுமே போதாத நிலையில், சிறப்பு முறையிலான பல கட்ட சோதனைகள் நடத்தப்பட வேண்டும். இந்நோய் பாதித்த மக்கள் அரசு மருத்துவமனைகளுக்கு செல்லும் போது, அவர்களின் ரத்த பரிசேதனைகளை கண்டறிய போதிய உபகரணங்களும் – வசதிகளும் இல்லை என கூறப்படுகிறது. மாவட்ட மருத்துவமனைகளிலேயே இதற்கான சிறப்பு வசதிகள் இன்றி, ரத்த பரிசேதாதனை முடிவுகள் வருவதில் காலம் தாழ்த்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்நோய் கண்டறிய ஏற்படும் கால தாமத்தினாலேயே பல உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்தாகவும், சில மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு முகாம்களை திறக்க வேண்டும். நன்கு பயிற்சியும் - கிருமி தொற்று குறித்த பணி அனுபவமும் உள்ள டாக்டர்களை இம் முகாம்களில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ரத்த பரிசேதனை வசதியும், நோய் கண்டறியப்பட்டால் அதனை குணமாக்கும் மருந்து – மாத்திரைகளும் போதிய அளவில் எந்நேரமும் இருப்பு வைக்கப்பட வேண்டும். இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து, இந்நோயை கட்டுப்படுத்துவதில் போர்க்கால நடடிவக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசினை வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.