-
நாட்டு மக்களின் எதிர்கால அடிப்படை தேவைகளை நிறைவேறும் சிந்தனை மேலோங்கியுள்ளது - பட்ஜெட் குறித்து டாக்டர் பாரிவேந்தர் கருத்து
இந்தியாவில் 70 ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்றில் முதன்முறையாக 2017 – 18ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையுடன், ரயில்வே துறைக்கான நிதிநிலை அறிக்கையினையும் சேர்த்து நிதியமைச்சர் திரு.அருண்ஜெட்லி அவர்கள் நாடாளுமன்றத்தில் இன்று (01.12.17) தாக்கல் செய்தார்.
இதில் இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளுக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் - வரும் 2018–ம் ஆண்டு மே 1-ம் தேதிக்குள் அனைத்து கிராமங்களுக்கும் முழுமையாக மின்வசதி செய்யப்படும் என்ற அறிவிப்பும் விவசாயத்திற்கு ஊக்கமருந்தாக அமையும்.
மாணவர்களின் அறிவை விரிவாக்கி – புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதுடன், உலக நாடுகளுடன் போட்டியிடும் அளவிற்கு கல்வி கொள்கையில் சீர்திருத்தம் கொண்டுவந்து, புதிய பாடதிட்டம் உருவாக்கப்படும் என்பதை வரவேற்கிறோம். கிராமப்புற பெண்கள் திறன் மேம்பாடு - கரும்பு நிலுவைத்தொகை வழங்க கூடுதல் நிதி ஒதுக்கீடு - உயிர் காக்கும் மருந்து, கருவி விலை குறைவு - நாடு முழுவதும் 500 ரயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டுகளுடன், வரும் 2019-ம் ஆண்டிற்குள் ரயில் பெட்டிகளில் உதவியாளர்களை நியமித்து, அனைத்து பெட்டிகளிலும் பசுமை கழிவறை (Bio Toilet)ஏற்படுத்தி, ஆளில்லா ரயில்வே கேட் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பினையும் –வரும் 2025-க்குள் காச நோய் முற்றிலும் ஒழிக்கப்படும் என்ற அறிவிப்பினையும் இந்திய ஜனநாயக கட்சி பாராட்டி வரவேற்கின்றது.
அதே வேளையில், தமிழகத்திற்கு புதிய ரயில் திட்ட அறிவிப்பு ஏதும் இல்லாததும் – ஏற்கனவே தமிழகத்தில் நிலுவையிலுள்ள ரயில் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்காததும் – எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு இல்லாததும் வருத்தமளிக்கக்கூடியதாக உள்ளது. ரயில்வே துறைக்கான மானியக்கோரிக்கையின் போதாவது, தமிழகத்திற்கு தேவையான ரயில்வே திட்டங்களின் மீது கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என விரும்புகின்றோம்.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2017-18 ஆண்டிற்கான மத்திய பொது பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட்டில் அனைத்து மாநில மக்களின் முழுமையான எதிர்பார்ப்பினையும் பூர்த்தி செய்யாவிட்டாலும், நாட்டு மக்களின் எதிர்கால அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்கிற சிந்தனை மேலோங்கியுள்ளது. அதன் அடிப்படையில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் இந்த நிதிநிலை அறிக்கையை வரவேற்கின்றோம்.