-
பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் கேரளாவின் முயற்சியை தடுத்து நிறுத்தவேண்டும் - மத்திய – மாநில அரசுகளுக்கு டாக்டர் பாரிவேந்தர் கோரிக்கை
தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் அப்பர்பவானி எனும் இடத்தில் பவானி ஆறு உற்பத்தியாகின்றது. காவிரி ஆற்றின் முக்கிய துணைஆறுகளில் ஒன்றாகவும், தமிழகத்தின் இரண்டாவது பெரிய ஆறாகவும்,வற்றாத ஜீவ நதியாகவும் பவானி ஆறு உள்ளது. உற்பத்தியாகும் இடத்திலிருந்து கேரள எல்லைக்குள் சென்று, மீண்டும் கோவை மாவட்டம் அத்திக்கடவு அருகே முள்ளி என்ற இடத்தில் பில்லூர் அணையில் சேருகின்றது பவானி ஆறு.
பவானி ஆறு, தமிழகத்தின் கோவை – திருப்பூர் – ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வாழும் பல லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் –ஏறக்குறைய 2.30 லட்சம் ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசன வசதியை தந்து, காவிரியின் துணை ஆறாகவும் திகழ்கின்றது. ஆனால் தற்போது கேரள அரசு அம்மாநில நீர் பாசன துறையின் டிசைன் அண்டு ரிசர்ச் போர்டு மற்றும் தனியார் கட்டுமான நிறுவனத்தின் உதவியுடன் சுமார் 900 கோடி மதிப்பீட்டில்4650 ஹெக்டேர் பரப்பளவில், 51 அடி உயரத்திலும் 500 மீட்டர் அகலத்திலும் பவானி ஆற்றின் குறுக்கே வெவ்வேறு இடங்களில் ஆறு தடுப்பணைகளை கட்டத் தொடங்கியுள்ளது.
அதன் முதற்கட்டமாக தற்போது கோவை மாவட்டம் அட்டப்பாடி பள்ளத்தாக்கு பகுதியில் தாவளத்திற்கும் கீரக்கடவுக்கும் இடைப்பட்ட பகுதியில் தேக்குவட்டை மற்றும் மஞ்சகண்டி ஆகிய இரு இடங்களில் இரண்டு தடுப்பணைகளை கட்டும் பணியை தொடங்கிவிட்டது. கடந்த 2002-ம் ஆண்டு இதே போன்ற ஒரு முயற்சியை கேரள அரசு எடுத்தபோது, தமிழகத்தின் கடும் எதிர்ப்பினை அடுத்து, பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியை கைவிட்டது. தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழகத்தை வஞ்சிக்கும் நோக்கில் கேரளா எடுத்துள்ள அணைகட்டும் முயற்சியை இந்திய ஜனநாயக கட்சி மிக வன்மையாக கண்டிக்கின்றது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் சட்டரீதியாக தமிழகத்திடம் தோல்வியடைந்த கேரளா, கடந்தாண்டு சிறுவானி அணையின் குறுக்கே தடுப்பணை கட்ட முயற்சித்து அதிலும் தோல்விகண்டது. எனினும் குறுகிய அரசியல் லாபங்களுக்காக, அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் அரசுகள், தமிழகத்திற்கு எதிரான வேலைகளில் தொடர்ந்து ஈடுபடுகின்றன. தற்போது திட்டமிட்டே பவானி ஆற்றின் குறுக்கே பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் கட்டும் செயல் இரு மாநில நல்லுறவில் விரிசலை ஏற்படுத்தும் என்பதை ஏன் கேரளா உணரவில்லை?
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலையில் மின்உற்பத்தி, விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரத்திற்கு பவானி ஆற்றின் சேமிப்பு அரணாக பில்லூர் அணை உருவாக்கப்பட்டது. ஒரு வேளை கேரள அரசின் திட்டப்படி ஆறு தடுப்பணைகள் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டால், தமிழகத்திற்கு வரும் பவானி நீர்வரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டு பில்லூர் அணை வறண்டுபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் போதுமான பருவமழை பெய்யாத காரணத்தினால் நீர் ஆதாரங்கள் முற்றிலுமாக வறண்டு, விவசாயம் அழிந்து, தற்போது தமிழகம் வறட்சி மாநிலமாக மாறிவிட்டது. ஏற்கனவே பருவமழை பொய்த்ததால் சிறுவாணி வறண்டதுபோல், தற்போது கேரளாவின் அணைகட்டும் முயற்சியால் பில்லூர் மற்றும் பவானி சாகர் அணையும் வறண்டுபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, பவானி ஆற்றின் குறுக்கே அணைகட்டுவதாக இருந்தால், தமிழகத்தின் ஒப்புதலையும், மத்திய அரசின் ஒப்புதலையும் கேரளா பெறவேண்டும். ஆனால், நிலைமையை பார்க்கும் போது, தமிழகம் மற்றும் மத்திய அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாகவே கேரள அரசு இம் முயற்சியினை எடுத்துவருவதுபோல் தெரிகின்றது. இது இருமாநில மக்களின் வாழ்வாதார பிரச்சினை என்பதை கருத்தில்கொண்டு, பவானி ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டும் பணியை கேரள அரசு நிறுத்திவிட வேண்டும். இல்லையெனில், மத்திய அரசு தலையிடவேண்டும்.தமிழக அரசும் உடனடியாக இதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.